அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அமெரிக்கா அணி நிர்ணயித்த 129 ரன்கள் இலக்கை வெறும் 10.5 ஓவர்கள் சேஸிங் செய்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் ரேட்டும் உச்சத்திற்கு சென்றுள்ளது. இதனால் சொந்த மண்ணில் நடக்கும் டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து அமெரிக்கா அணி விளையாடியது. இந்த இரு அணிகளும் தங்களின் முதல் சூப்பர் 8 போட்டியில் தோல்வியடைந்திருந்ததால், கட்டாயம் வெற்றிபெற வேண்டிய சூழல் இருந்தது. இதன்பின் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பவல் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய அமெரிக்கா அணி அணி 19.5 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சேஸ் மற்றும் ரஸ்ஸல் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி விரைவாக எட்டும் பட்சத்தில் ரன் ரேட்டை உயர்த்தி கொள்ள முடியும் என்று பார்க்கப்பட்டது.
இதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக ஹோப் – சார்லஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரில் மட்டும் நிதானம் காத்த ஹோப், 2வது ஓவரில் இருந்து பவுண்டரியும், சிக்சருமாய் பொளந்து கட்டினார். ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று ஹோப் வெளுத்து கட்ட, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. பவர் பிளேவின் கடைசி ஓவரில் மட்டும் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் நிதானமாக ஆடிய சார்லஸ் 15 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் ஹோப் 26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இவருடன் நிக்கோலஸ் பூரன் இணைந்து அதிரடியில் களமிறங்க, ஒவ்வொரு ஓவருக்கும் சிக்சர்கள் பறந்து கொண்டே இருந்தன. அதிலும் மிலிந்த் குமார் வீசிய 9வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட 22 ரன்கள் விளாசப்பட்டது.
தொடர்ந்து 11வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் 2 சிக்சர்களை விளாச, பின்னர் ஹோப் ஒரு சிக்சரை அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றிபெற வைத்தார். இதனால் 10.5 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 130 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய ஹோப் 39 பந்துகளில் 8 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 82 ரன்களை விளாசினார்.