சேறுபூசும் கீழ்த்தரத் தாக்குதல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை – பொன்சேகாவுக்குச் சஜித் பதிலடி.
“இன்றைய நிலவரப்படி, நாட்டின் அரசும் எதிர்க்கட்சியிலுள்ள வேலையாற்றத் தெரியாத சில கட்சிகளும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து பகிர்ந்து வருவது சரியில்லை. அவர்களைப் பொறுத்தவரை வளங்கள் இல்லாத இடத்துக்கு வளங்களை வழங்குவது தவறு என்றும் கருதுகின்றனர். அவர்கள், மக்களுக்கு நலன் பயக்கும் பிரபஞ்சம் மற்றும் மூச்சு ஆகிய புண்ணிய திட்டங்களுக்கு சேறுபூசி அதனை எதிர்த்து வருகின்றனர். இந்தச் சேறுபூசும் கீழ்த்தரத் தாக்குதல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
“மதுபான உரிமப் பத்திரம் கொடுத்தே அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதாக தெரிவித்து, விகாரைகளுக்கு முன்பாகவும் மதுபானசாலைகளை திறந்து வருகின்றனர். இது போன்ற கேவலமான டீல்களைச் செய்து கொண்டு பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களுக்கு சேறு பூசும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கணினிகளை விநியோகிப்பது அவர்களின் பார்வையில் தவறாகத் தோன்றி, பியர் அனுமதிப் பத்திரம் வழங்குவது தவறில்லாத ஒன்றாக தோன்றுகின்றது. அவர்கள் எமது அனைத்து அரசியல் கொள்கைகளையும் பணத்துக்குக் காட்டிக்கொடுத்துள்ளனர்.” – என்றும் அவர் சாடினார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 249 ஆவது கட்டமாக ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், குருநாகல், யாபஹுவ, வலஸ்வெவ குணபால மலலசேகர மாதிரி பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
சஜித் பிரேமதாஸ தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:-
“டொலர்களுக்கும், வரப்பிரசாதங்களுக்கும், சலுகைகளுக்கும் அவர்கள் அவர்களது கொள்கைகளைக் காட்டிக் கொடுத்துள்ளனர். நாடு வங்குரோத்தடைந்து, மக்கள் வாழ்வு சீரழிந்துள்ள வேளையில், மக்கள் பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர் ஒன்று சேர்ந்து, மக்களுக்கு நலன் பயக்கும் பிரபஞ்சம் மற்றும் மூச்சு ஆகிய புண்ணிய திட்டங்களுக்கு சேறுபூசி அதனை எதிர்த்து வருகின்றனர். இந்தச் சேறுபூசும் கீழ்த்தரத் தாக்குதல்களுக்கு நாம் அஞ்சப்போவதில்லை.
இலவசக் கல்வியை பாதுகாப்போம் என்று கூறுபவர்களின் முட்டாள்தனமான கொள்கைகளால் இலவசக் கல்வி அழிந்து வருவதனால், இலவசக் கல்வியில் ஆங்கில மொழிக் கல்வியை விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தாமல் கல்வியை மேம்படுத்த முடியாது.
இன்று நாடு முழுவதும் பட்டதாரிகள் வேலை கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு தனியார் துறையில் கூட வேலை கிடைப்பதில்லை. கலைப் பட்டம் அந்நிறுவனங்களுக்கு ஏற்றதல்ல என்றும் தெரிவித்துள்ளனர். இது குறித்து யாரும் பேசுவதில்லை.
சிங்களம் மட்டும், தமிழ் மட்டும் என்று கூறி தத்தமது வாக்கு வாங்கிகளை அதிகரித்துக் கொள்ளவே அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர். காலத்துக் காலம் அரசியல்வாதிகள் ஆட்சிப்பீடம் ஏறினாலும் 41 இலட்சம் மாணவ தலைமுறைக்கு ஏற்பட்ட மாற்றம் ஏதுமில்லை.
பாடசாலை கட்டமைப்புக்குத் தேவையான வளங்களை வழங்க முடியாத ஆட்சியின் மூலம் பிள்ளைகளின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. இலவசக் கல்வியைப் பாதுகாப்பதாகக் கூறி பாத யாத்திரை செல்லும் தரப்பினர் இலவசக் கல்வி மேம்படுவதை ஒருபோதும் விரும்புவதில்லை.
புரட்சியாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரின் பிள்ளைகள் தனியார் பாடசாலைக்கும் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்குமே செல்கின்றார்கள். அவர்களுக்குத் தனியார் கல்வி நல்லதாக இருந்தாலும் இலவசக் கல்வி நல்லதொன்றாக அமையவில்லை. இலவசக் கல்வியை மேம்படுத்த முயலும் போது, நாட்டின் ஏனைய பிள்ளைகளும் தமது பிள்ளைகளின் நிலைக்கு வருவார்கள் என்ற பொறாமைத்தன சிந்தனையுடனயே இவர்கள் சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.” – என்றார்.
மேலும் செய்திகள்
நீட் வினாத் தாள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை – மாணவர் அதிர்ச்சி வாக்குமூலம்
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு
அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் விற்றதாக நால்வர் கைது.
பள்ளி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 5 நபர்களை தேடும் போலீசார்
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்கள் தொடர்பில் பியூமியிடம் விசாரணைகள்..
ராஜிதவின் பாய்ச்சல் உறுதி… அடுத்த மாதம் முதல் வாரத்தில் ராஜித சுகாதார அமைச்சராக பதவிப் பிரமாணம்…