ஜனாதிபதியுடன் இணையும் பிள்ளையான் ..
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு TMVP ஆதரவளிக்கவுள்ளதாக,கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் TMVP கட்சியின் தலைவர் பிள்ளையான் உள்ளிட்டோர் மட்டக்களப்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (22) நடைபெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் வெற்றியடைய ஆதரவு வழங்கினால், நிலத்தை நம்பியுள்ள கிழக்கு மக்கள் சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்பு ஏற்படும் எனவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தாம் ஏன் ஒன்று கூடுகின்றோம் என பிள்ளையான் விளக்கமளித்துள்ளார்.
இன்று மிகவும் சிறப்பான நாள். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் தலைவிதியிலும் , எதிர்கால வளர்ச்சியிலும் இன்றைய நாள் திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணம் விவசாயம் மற்றும் மீன்பிடியை அடிப்படையாகக் கொண்டது. இந்த மாகாணத்தின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் நாம் ஒன்றிணைய வேண்டும். இந்த மாகாணத்தின் அபிவிருத்திக்கான சரியான திட்டம் அவரிடம் உள்ளது. எனவே, நாங்கள் அவருக்கு ஒத்துழைக்கிறோம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதில் மாகாண சபையின் ஊடாக இயன்றளவு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென அவர் வெளிப்படையாகக் கூறுகிறார். அந்தத் தீர்வுகளை ஜனாதிபதி எதிர்காலத்தில் வழங்குவார் என நம்புகிறோம். அதற்குத் தேவையான பலத்தை அவருக்குத் தருவது நமது பொறுப்பு.
பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான பணத்தை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்காக அவருக்கும் நன்றி கூறுகிறோம்.
நாட்டின் கட்டுமானத் துறை, உற்பத்தித் துறை, விவசாய நவீனமயமாக்கல், மீன்பிடித் துறை, கைத்தொழில் துறை, செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் நவீன தொழில்நுட்பத்தை உயர் மட்டத்திற்குக் கொண்டு வருவதற்குத் திட்டமிட்ட முறையில் செயற்படும் ஆற்றலும் அறிவும் திறனும் கொண்ட ஒரே நபர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே.
கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக அவர் கொண்டுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மண்ணை நம்பி வாழும் கிழக்கு மாகாண மக்கள் உறுதுணையாக இருந்தால் அவர்கள் சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதையும் கூற வேண்டும். மேலும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிக்கு எமது ஆதரவை வழங்குவோம் என உறுதியளிக்கின்றோம் என்றார் அவர்.