T20 உலககோப்பை; வலுவான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்.

2024 டி20 உலகக் கோப்பையில் யாரும் எதிர்பாராத வகையில் வலுவான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான். இதை அடுத்து இந்த உலகக் கோப்பையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையான போட்டி கிங்ஸ்டவுன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டி நடந்த பிட்ச் பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு அளித்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் படு நிதானமாக ஆடி 148 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் 49 பந்துகளில் 60 ரன்களும், இப்ராஹிம் சத்ரான் 48 பந்துகளில் 51 ரன்களும் சேர்த்தனர். அவர்களின் அபாரமான துவக்கம் காரணமாக மட்டுமே ஆப்கானிஸ்தான் அணி 148 ரன்கள் சேர்த்தது.

துவக்க வீரர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்த நிலையில், ஆப்கானிஸ்தான் கடைசி நான்கு ஓவர்களில் மட்டும் ஐந்து விக்கெட்களை இழந்தது. எனினும், துவக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்த நிலையில் ஆப்கானிஸ்தான அணி 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் எடுத்தது.

அடுத்து சேஸிங் செய்த ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வரிசையாக விக்கெட்களை இழந்தது. ஒரு கட்டத்தில் தனியாளாக ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல திட்டமிட்டு கிளென் மேக்ஸ்வெல் 41 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார். மறுபுறம் விக்கெட்கள் சரிந்த நிலையிலும் அவர் அதிரடியாக ஆடினார். எனினும், அவர் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்ததை அடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி உறுதியானது.

19.2 ஓவர்களில் 127 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய அணியின் நான்கு முக்கிய விக்கெட்களை வீழ்த்தி திருப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார் குலாப்தீன் நயிப். அவர் 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

நவீன் உல் ஹக் 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் ஆஸ்திரேலிய அணியின் அரை இறுதி சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாக மாறி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.