வாகனத்திலிருந்து தவறி விழுந்த பள்ளி சிறுமிகள்; ஓட்டுநர் கைது (காணொளி)
சாலையில் சென்றுகொண்டிருந்த பள்ளி வாகனத்திலிருந்து மாணவியர் இருவர் தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலம், வதோதரா நகரில் நிகழ்ந்தது.
நல்ல வேளையாக அந்த வேனுக்குப் பின்னால் வேறு எந்த வாகனமும் வராததால் பெருவிபத்து தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் முழுவதும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது.
அதில், வேனின் பின்கதவு திடீரெனத் திறந்து, சிறுமியர் இருவரும் கீழே விழுவது தெரிகிறது.
அவர்களால் உடனடியாக எழுந்து நிற்க முடிந்தபோதும், எதிர்பாராத இந்நிகழ்வால் அதிர்ச்சி அடைந்தனர். அடிபட்டுள்ளதா என ஒருவருக்கொருவர் சோதித்துக்கொள்வதையும் ஆறுதல் கூறுவதையும் அக்காணொளி காட்டுகிறது.
அவர்கள் வேனிலிருந்து விழுந்ததும், அவ்வழியே சென்றோர் உடனடியாக உதவிக்கு விரைந்தனர்.
ஆயினும், அந்த வேனின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, அச்சிறுமியரின் பெற்றோர் அளித்த புகார்களை அடுத்து, வேனை ஓட்டிச் சென்ற ஆடவர் கைதுசெய்யப்பட்டுவிட்டதாக ‘இந்தியா டுடே’ ஊடகச் செய்தி தெரிவித்தது.
சம்பவம் குறித்து விசாரித்து வரும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், அந்த ஆடவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
இச்சம்பவம், அத்தகைய வேன்களில் பள்ளி செல்லும் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புவதாக அமைந்துள்ளது.