உக்ரைன் சமாதான மாநாடு – தொலைத்த இடத்தில் தேடாமல்… சுவிசிலிருந்து சண் தவராஜா.
பெரும் ஆரவாரத்துடன் முன்னெடுக்கப்பட்ட உக்ரைன் சமாதான உச்சிமாநாடு எந்நதவித ஆரவாரமும் இல்லாமல் நடைபெற்று முடிந்திருக்கின்றது. கடந்த வார இறுதியில் சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட பிரகடனமும் தனித்துவமான எந்தவித அம்சமும் இன்றி அமைந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. பல ஊடகங்களும் தெரிவித்திருந்ததைப் போலவே உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கியின் பரப்புரைக்கான ஒரு களமாகவே இந்த உச்சிமாநாடு நடைபெற்று முடிந்திருக்கின்றது.
அயல் நாடான இத்தாலியில் 14ஆம் திகதி நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் கலந்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்து மாநாட்டில் கலந்து கொள்ளாமலேயே நாடு திரும்பியிருந்தார். மாநாட்டுக்கு வருகை தந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களும் மாநாட்டு முடிவில் பிரகடனம் வெளியிடும் நிகழ்வில் கலந்து கொள்ளாமல் சனிக்கிழமையே நாடு திரும்பி விட்டார்.
உக்ரைன் போரில் உக்ரைன் தரப்புக்கு அதிக பொருண்மிய, படைத் துறை மற்றும் பரப்புரை உதவிகளை நல்கிவரும் நாடாக அறியப்படும் அமெரிக்க அரசுத் தலைவர்கள் நடந்து கொண்ட விதமானது இந்த மாநாட்டின் பெறுமானத்தை உணர்த்தப் போதுமானது.
92 நாடுகள் கலந்து கொண்ட இந்த உச்சி மாநாட்டில் நாடுகளின் தலைவர்கள் என்று பார்க்கையில் இங்கிலாந்து, பிரான்ஸ், யேர்மனி, கனடா, இத்தாலி மற்றும் யப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மாத்திரமே வருகை தந்திருந்தனர். ஏனைய நாடுகள் தமது பிரதிநிதிகளை, ராஜதந்திரிகளை அனுப்பி வைத்திருந்தன. இறுதியில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் கூட அனைத்து நாடுகளும் கையொப்பம் இட்டிருக்கவில்லை. 78 நாடுகள் மாத்திரமே கையொப்பம் இட்டிருந்தன. அவற்றோடு ஐரோப்பிய ஆணைக்குழு, ஐரோப்பியப் பாராளுமன்றம் மற்றும் ஐரோப்பிய மன்றம் ஆகியவையும் கையொப்பம் இட்டிருந்தன. கொசோவா இந்தப் பிரகடனத்தில் கையொப்பம் இட்டிருந்தாலும் அது உலகின் பல நாடுகளால் இன்னமும் ஒரு தனி நாடாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஈராக் மற்றும் யோர்தான் ஆகிய நாடுகள் கையொப்பம் இட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இறுதியாக வெளியிடப்பட்ட பத்திரத்தில் அந்த நாடுகளின் கையொப்பம் காணாமல் போயிருந்தது. இந்த இரு நாடுகளும் தமது கையொப்பங்களை இறுதி நேரத்தில் திரும்பப் பெற்றுக் கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. பிந்திக் கிடைத்த செய்திகளின் படி பிரகடனத்தில் கையொப்பம் இட்டிருந்த றுவாண்டா தனது கையொப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாக அறிய முடிகின்றது.
இந்தியா, தென்னாபிரிக்கா, சவூதி அரேபியா, மெக்சிகோ, இந்தோனேசியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த போதிலும் அவர்கள் பிரகடனத்தில் கையொப்பமிடவில்லை. பிரேசில் நாட்டுப் பிரதிநிதி பார்வையாளர் என்ற தரத்துடனேயே கலந்து கொண்டிருந்தார்.
மோதலின் முக்கிய பங்காளியான ரஸ்யா மாநாட்டுக்கு அழைக்கப் பட்டிருக்கவில்லை. அதேவேளை ரஸ்யாவின் நெருங்கிய சகா எனக் கருதப்படும் சீனா மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பட்டிருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ரஸ்யா ஏலவே தெரிவித்திருந்தது. ஸெலன்ஸ்கியின் 10 அம்சத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே மாநாடு நடைபெறவுள்ள நிலையிலும், இந்தத் திட்டத்தை ஏற்கனவே தாம் நிராகரித்துள்ள நிலையிலும் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என ரஸ்யா மார்ச் மாதமே தெரிவித்திருந்தது. மோதலின் முக்கிய பங்காளியான ரஸ்யா கலந்து கொள்ளாத மாநாட்டில் பங்கேற்பது பயனற்றது என்பது சீனாவின் நிலைப்பாடு.
மாநாட்டுக்கான அழைப்பு 160 நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும் 92 நாடுகளே கலந்து கொண்டிருந்தன என்பது அவதானிக்கப்பட வேண்டிய ஒரு தகவல். மேற்குலகின் செல்வாக்கு உலகின் பல நாடுகளில் தளர்ச்சியடைந்து வருவதற்கான ஒரு காட்டியாகவும், ரஸ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் செல்வாக்கு உயர்ந்து வருவதற்கான ஒரு காட்டியாகவும் இதனைக் கொள்ள முடியும்.
மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிற்ரோ குலேபா, ஏதோ ஒரு கட்டத்தில் ரஸ்யாவுடன் பேசியே உக்ரைன் போருக்குத் தீர்வு காண முடியும் எனத் தெரிவித்திருந்தார். இதே கருத்தை மேற்குலகின் பல இராஜதந்திரிகளும் எதிரொலித்திருந்தனர். அந்த ஏதோ ஒரு கட்டம் என்பது போரில் உக்ரைன் படைகள் வெற்றி பெறும் பட்சத்தில் எனப் புரிந்து கொள்ளலாம். ஆனால், உலகிலேயே அதிக அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வல்லரசான ரஸ்யா போரில் தோற்கும் என எதிர்பார்ப்பது அறிவிழிவே அன்றி வேறில்லை. அதிலும், தற்போது ரஸ்யப் படைகள் மெதுமெதுவாக போர்முனையில் முன்னேறி வருவதாகச் செய்திகள் வெளியாகி வரும் நிலையிலும், உக்ரைனின் பாதுகாப்பு அரண்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டுவரும் நிலையிலும் உக்ரைன் நினைப்பதோ அல்லது அந்த நாட்டுக்கு முட்டுக் கொடுத்துவரும் மேற்குலகம் நினைப்பதோ நடக்கப் போவதில்லை என்பதே யதார்த்தம்.
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பாணியில் நடந்து கொள்ளும் உக்ரைன் அரசுத் தலைமையும், மேற்குலகமும் இந்தப் போரில் இன்னும் என்ன விலை கொடுக்கக் காத்திருக்கின்றனவோ தெரியவில்லை.
மாநாட்டை ஒட்டி மாநாட்டுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தார். பல்வேறு நிபந்தனைகளை அவர் விதித்திருந்தாலும் உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது என்ற தனது முன்னைய நிபந்தனையை அவர் மீள வலியுறுத்தி இருந்தார்.
போர் நீடித்து இழப்புகள் அதிகரித்த பின்னர் பேச்சுவார்த்தை மேசைக்குச் சென்று இதே கோரிக்கைக்கு இணங்குவதை விடவும் இப்போதே பேச்சுக்கு இணங்குவது உக்ரைனுக்கும் ஒட்டுமொத்த உலக நலனுக்கும் நல்லது.
உக்ரைன் போருக்கான மேற்குலகின் ஆதரவு படிப்படியாகக் குறைவடைந்து வருவதைப் பார்க்க முடிகின்றது. யூலை 4ஆம் திகதி பிரான்சில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் லீ பென் தலைமையிலான வலதுசாரிகள் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவார்களாக இருந்தால் அதிபர் மக்ரோன் தான் நினைத்தவாறு போர்முனைப்பைத் தொடர்வது சாத்தியமாக இருக்குமா என்பது கேள்விக் குறியே.
அதேபோன்று, நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தோல்வியைச் சந்தித்து டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவாராக இருந்தால் உக்ரைன் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
2022இல் போர் ஆரம்பித்து ஒருசில மாதங்களில் துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களில் இருந்து உக்ரைன் விலகியிருக்காவிட்டால் இந்த இரத்தக் களரி என்றோ முடிவுக்கு வந்திருக்கும். தற்போது கூட ரஸ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுக்களுக்கு மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என துருக்கி அறிவித்துள்ளது. ஆனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள ஸெலன்ஸ்கி தயாராக இல்லை என்பது தெளிவு.
அரசியல் நிலைமைகளில் மாற்றம் ஏற்படும் போது பேச்சுக்கள் மூலமே தீர்வு என மேற்குலகம் முடிவு செய்துவிட்டால் ஸெலன்ஸ்கி இறங்கி வந்தே ஆகவேண்டும். இல்லாவிடில் அவரது இடத்துக்கு இணங்கிப் போகும் புதியவர் ஒருவர் கொண்டு வரப்படுவார் என்பதே கசப்பான உண்மை.