இறுதிச்சடங்கு செய்த நபர் ஒருவர் தான் உயிருடன் இருப்பதாக கூறியதால் பரபரப்பு

இறுதிச்சடங்கு செய்த நபர் ஒருவர் தான் உயிருடன் இருப்பதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய மாநிலமான தெலங்கானா, பஷீராபாத் அருகே உள்ள நவந்க்தகியை சேர்ந்தவர் எல்லப்பா (45). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலை காரணமாக வெளியூருக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.
பின்னர், விகாரபாத் ரெயில்வே பொலிஸார் எல்லப்பாவின் வீட்டிற்கு போன் செய்து எல்லப்பா ரயிலில் சிக்கி இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். அவர் பிணத்தின் அருகே போன் இருந்ததாகவும் கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது அவரது முகம் சிதைந்து இருந்ததால் எல்லப்பா என்று முடிவு செய்தனர்.
இதையடுத்து, இறந்தவரை வீட்டிற்கு கொண்டு வந்து இறுதிச்சடங்குகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், எல்லப்பாவின் உறவினர் ஒருவர் எல்லப்பாவை தண்டூரில் பார்த்துள்ளார். அப்போது, நீ இறந்துவிட்டதாக நினைத்து உன்னுடைய குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்வதாக கூறியுள்ளார்.
அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த எல்லப்பா வீட்டிற்கு போன் செய்து தான் உயிருடன் இருப்பதாக கூறினார். பின்னர், இறுதிச்சடங்கு செய்வதை உறவினர்கள் நிறுத்தினர்.
இதையடுத்து, ரெயில்வே பொலிஸ் நிலையத்திற்கு சென்ற எல்லப்பா தன்னுடைய செல்போனை யாரோ திருடி சென்று விட்டதாகவும், விபத்தில் இறந்தவர் யார் என்று தெரியவில்லை என கூறினார்.
பின்னர், எல்லப்பாவின் வீட்டில் இறுதி சடங்கு செய்ய வைத்திருந்த பிணத்தை பொலிஸார் எடுத்துச் சென்றனர். விபத்தில் இறந்த நபர் யாரை என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.