T20 உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.

‘டி-20’ உலக கோப்பை அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. கேப்டன் ரோகித் அரைசதம் விளாச, ‘சூப்பர்-8’ போட்டியில் 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசின் செயின்ட் லுாசியாவில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டியில் (‘பிரிவு-1’) இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு கோலி (0) ஏமாற்றினார். இந்திய அணி 4.1 ஓவரில் 37/1 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின், ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் 4 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த கேப்டன் ரோகித் சர்மா, கம்மின்ஸ் வீசிய 5வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து அரைசதம் எட்டினார். ரிஷாப் பன்ட் (15) நிலைக்கவில்லை. ஸ்டார்க் ‘வேகத்தில்’ ரோகித் (92) அவுட்டானார். சூர்யகுமார் (31), ஷிவம் துபே (28) ஓரளவு கைகொடுத்தனர். ஸ்டாய்னிஸ் வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர் அடித்தார் பாண்ட்யா. இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன் எடுத்தது. பாண்ட்யா (27), ஜடேஜா (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் (6) ஏமாற்றினார். அர்ஷ்தீப் சிங் வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் கேப்டன் மார்ஷ். பும்ரா வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டிய ஹெட், ஹர்திக் பாண்ட்யா வீசிய 6வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். குல்தீப் ‘சுழலில்’ மார்ஷ் (37) சிக்கினார். பாண்ட்யா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஹெட், 24 பந்தில் அரைசதம் எட்டினார். மேக்ஸ்வெல் (20), ஸ்டாய்னிஸ் (2) சோபிக்கவில்லை. பும்ரா பந்தில் ஹெட் (76) அவுட்டானார். மாத்யூ வேட் (1), டிம் டேவிட் (15) ஏமாற்றினர்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 29 ரன் தேவைப்பட்டன. பாண்ட்யா பந்துவீசினார். இந்த ஓவரில் 4 ரன் மட்டும் கிடைத்தது. ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்து தோல்வியடைந்தது. ஸ்டார்க் (4), கம்மின்ஸ் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.