அதிக வெப்பம் காரணமாக சவுதியில் ஹஜ் யாத்திரை வந்தவர்கள் 1,000க்கும் மேற்ட்பட்டோர் பலி.

கடும் வெப்பம் காரணமாக சவுதியில் உயிரிழந்த ஹஜ் பயணியரின் எண்ணிக்கை 1,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. முஸ்லிம் மக்கள் தங்கள் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக, ஆண்டுதோறும் மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம். இந்தாண்டு, கடந்த 14ம் தேதி இந்த புனித யாத்திரை துவங்கியது.

சவுதியில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக வெப்பம் பதிவாகி வரும் சூழலில், யாத்திரை வந்தவர்கள் ஆங்காங்கே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், கடும் வெப்பத்தால் இந்தியா உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,081 ஹஜ் பயணியர் இறந்தது தெரிய வந்துள்ளது.

இதில், அதிகபட்சமாக எகிப்து நாட்டைச் சேர்ந்த 658 பேர் பலியாகி உள்ளனர். நம் நாட்டைச் சேர்ந்த 98 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பலருக்கு ஏற்கனவே உடல் உபாதைகள் இருந்ததாகவும், வயோதிகம் காரணமாக இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது தவிர, கூட்ட நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை தடுக்க, சவுதி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், சவுதி அரசு தரப்பில் இறந்தவர்களின் விபரத்தை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

ஹஜ் யாத்திரை வந்தவர்களில் பலர் மாயமாகி உள்ளதால், அவர்களின் நிலை என்னானது என்பது தெரியவில்லை. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனினும், இதுவரை இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.