வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றும் அரசு ஊழியர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றும் அரசு ஊழியர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.
மத்திய சிவில் சர்வீஸ் (விடுப்பு) விதிகள் 1972 சட்டம் திருத்தப்பட்டு இந்த 6 மாத விடுப்பு விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் தாய்க்கு 180 நாள்கள் மகப்பேறு விடுப்பும், குழந்தையின் தந்தைக்கு 15 நாட்கள் விடுப்பும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாடகைத் தாய் மற்றும் அவர் மூலம் குழந்தையைப் பெறும் தாய், இருவரில் ஒருவர் அல்லது இருவருமே அரசு ஊழியர்களாக இருந்து, 2 குழந்தைகளுக்கும் குறைவாக இருப்பவர்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதம் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு பணியாளர் நலன் அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெறும் தந்தை அரசு ஊழியராகவும், 2 குழந்தைகளுக்கு குறைவாகப் பெற்றவராகவும் இருந்தால், குழந்தை பிறந்த 6 மாத காலத்துக்குள் அவர்15 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ள புதிய விதிகளில் அனுமதி தரப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, வாடகை தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் தாய்க்கு 2 குழந்தைகளுக்குக் குறைவாக இருந்தால் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு எடுக்க மத்திய சிவில் சர்வீஸ் (விடுப்பு) புதிய விதிகள் 2024-ன்படி அனுமதி வழங்கப்படுகிறது.
தற்போதைய விதிகள்படி, பெண் அரசு ஊழியர் மற்றும் தனி பெற்றோராக இருக்கும் ஆண் அரசு ஊழியருக்கு குழந்தைகள் பராமரிப்பு விடுப்பாக, இரண்டு குழந்தைகளின் கல்வி, உடல்நலம் மற்றும் இதரத் தேவைகளுக்கு என அவர்களுடைய மொத்தப் பணிக் காலத்தில் 730 நாள்கள் விடுப்பு வழங்கப்படுகிறது.