சனாதானம் குறித்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமின்
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதிக்கு எதிரான வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்க வேண்டும் என பேசியதாக புகார் எழுந்தது.
இதற்கு நாடு முழுவதும் பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில் உதயநிதிக்கு எதிராக பெங்களூருவைச் சேர்ந்த பரமேஷ், பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத உதயநிதி, 3ஆவது முறையாகவும் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.
இதனிடையே பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜரானார். அப்போது உதயநிதி சார்பில், சனாதனம் தொடர்பாக பல மாநிலங்களில் போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தொகுத்து ஒரே இடத்தில் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.
இந்நிலையில் உதயநிதிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் பிணைத் தொகை செலுத்த உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.