கள்ளச்சாராய மரணம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி காவல் நிலையம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்பகுதியிலுள்ள கருணாபுரம் பகுதியில் ஜூன் 18-ஆம் தேதி துக்க நிகழ்வுக்கு வந்தவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில், 60 பேர் இறந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை அலுவலரான கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையிலான தனிப்படைக் குழுவினர், தீவிர விசாரணை நடத்தி, கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித்குமார்(37) சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்ததை அடுத்து இதுவரை கள்ளச்சாராயம் குடித்த 5 பெண்கள் உள்பட 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 21 பேரும், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தலா 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.