காதலருடன் இருக்க சட்டவிரோத வேலை அனுமதிச்சீட்டு வாங்கியவருக்குச் சிறை.
சிங்கப்பூர் காதலனுடன் இருப்பதற்காக கொவிட்-19 தொற்றுநோய் பரவலின்போது சிங்கப்பூருக்குள் நுழைய 41 வயதான வாங் டிங் ஐ என்ற தைவானிய மாது, “சுதந்திர வேலை அனுமதி” அட்டையை சட்டவிரோதமாக வாங்கினார்.
தான் ஓர் எழுத்தராக வேலை செய்யப்போவதாக வேலை அனுமதி அட்டை விண்ணப்பத்தில் அவர் குறிப்பிட்டிருந்தாலும், அவர் சட்டவிரோதமாக இரவு நேர கேளிக்கை விடுதியில் பணியாற்றினார்.
பொய்யான தகவல்களை குறிப்பிட்டு வேலை அனுமதி அட்டை பெறும் கும்பலிடம் இருந்து வெளிநாட்டினர் சட்டவிரோதமாக வேலை அனுமதி அட்டைகளை வாங்கிய தொடர் சம்பவங்கள் குறித்து மனிதவள அமைச்சு மேற்கொண்ட விசாரணையில் வாங் டி ஐ கைதானார்.
2021ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த விசாரணைகள், தொற்றுநோய்ப் பரவலின்போது பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டதால் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கும் தங்கியிருப்பதற்கும் வெளிநாட்டவர்கள் அத்தகைய அனுமதி அட்டைகளை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
வேலை அனுமதி அட்டை விண்ணப்பத்தில் தவறான தகவல்களை தனது காதலனுடன் சேர்ந்து சதி செய்ததற்காக வாங்கிற்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. உரிய வேலை அனுமதி அட்டையின்றி, ஓராண்டுக்கும் மேலாக இரவு நேர கேளிக்கை விடுதியில் வேலை பார்த்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் தீர்ப்பளிக்கும்போது கருத்தில்கொள்ளப்பட்டது.