ஜூலியன் அசாஞ் ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார்.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார்.
திரு அசாஞ், அமெரிக்க உளவியல் சட்டத்தை மீறிய குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, அமெரிக்க பசிபிக் தீவான ‘சைப்பான்லிருந்து விடுவிக்கப்பட்டார்.
திரு அசாஞ்சின் தந்தை, பிள்ளைகள், மனைவி ஸ்டெல்லா அசாஞ் உள்ளிட்ட குடும்பத்தார், ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பராவில் கூடியிருந்தனர்.
அவர் மாலை நேரத்தில் தனியார் விமானம் மூலம் அங்குச் சென்றடைந்தார்.
விமானத்தில் இருந்து வெளியேறிய அவர், மனைவியையும் தந்தையும் கட்டி அணைத்துக்கொண்டார்.
திரு அசாஞ்சின் தந்தையான திரு ஜான் ஷிப்டன், தமது மகன் விடுதலை செய்யப்படுவதற்கு மேற்கொண்ட பத்தாண்டுகால போராட்டத்திற்குப் பலன் கிட்டியுள்ளது.
2010ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான அமெரிக்கத் தற்காப்பு ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட நீண்டகால சட்டப் போராட்டம் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
முன்னதாக, “என் நம்பிக்கை குறைந்ததே இல்லை,” என்று திரு ஷிப்டன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
“ஜூலியன் ஆஸ்திரேலியா திரும்பி, தமது குடும்பத்தை அடிக்கடிப் பார்த்து, வாழ்வின் சாதாரண விஷயங்களைச் செய்ய முடிவது ஒரு பொக்கிஷம்,” என்றார் திரு ஷிப்டன்.
“சிறை வாழ்க்கையிலிருந்து மீண்டுவர திரு அசாஞ்சுக்கு நேரம் தேவை,” என்றும் அவர் கூறினார்.