காவல்துறையினரால் இருவர் சுட்டுக் கொலை
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 2 ஆடவர்களைக் காவல்துறை சுட்டுக் கொன்றது.
சம்பவம் இன்று (26 ஜூன்) அதிகாலை நடந்தது.
சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் ஒரு காரைச் சோதனை செய்ய முற்பட்டபோது அது நிற்காமல் வேகமாகச் சென்றது. காரை ஓட்டியவர் அதிகாரிகளை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார்.
சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கடந்ததும் கார் சாலையில் விபத்துக்குள்ளானது.
ஆனாலும் அந்த ஆடவர்கள் சுடுவதை நிறுத்தவில்லை.
பதிலுக்குக் காவல்துறை அவர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
அதில் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.
ஒருவரின் வயது 41. மற்றொருவரின் 51. இருவருமே போதைப்பொருள் உள்ளிட்ட இதர குற்றச்செயல் பதிவுகளைக் கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து கைத்துப்பாக்கியும் 176 பயன்படுத்தப்படாத குண்டுகளும் கைப்பற்றப்பட்டதாக The Star ஊடகம் தெரிவித்தது.
பினாங்கைச் சேர்ந்த அந்த 2 ஆடவர்களும் போதைப்பொருள் கடத்தியதாக நம்பப்படுகிறது.
அவர்களுக்கு ஏதேனும் கும்பலுடன் தொடர்பிருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க விசாரணை நடைபெறுகிறது.