உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானி
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான எல்.கே.அத்வானி, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் கராச்சியில் கடந்த நவம்பர் 8, 1927ல் பிறந்த எல்.கே.அத்வானி, 1942ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்தார். 1980ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் சேர்ந்து பாரதிய ஜனதா கட்சியை தோற்றுவித்த அவர், 1986 முதல் 1990 வரை பாஜக தேசியத் தலைவராக இருந்த அவர், பின்னர் 1993 முதல் 1998 வரையிலும், 2004 முதல் 2005 வரையிலும் அந்த பதவியில் இருந்தார். இதன்மூலம், பாஜக தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர் என்ற பெருமையையும் பெற்றார்.
ஏறக்குறைய 30 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்துள்ள அவர், உள்துறை அமைச்சராகவும், 1990 முதல் 2004 முதல் வாஜ்பாய் ஆட்சியில் துணை பிரதமராகவும் பதவி வகித்தார். 2009 பொதுத்தேர்தலில் அவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நிலையில், அந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வென்று ஆட்சியை கைப்பற்றியது. அதன்பிறகு, முன்பைப் போல வீரியத்துடன் செயல்பட முடியாத அத்வானி, முதுமையின் காரணமாக வீட்டிலேயே இருந்து வருகிறார்.
96 வயதாகும் அத்வானி கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வருகிறார். இதனிடையே, அவருக்கு கடந்த மார்ச் 30, 2024ஆம் தேதிஅன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில் நேற்று இரவு (ஜூன் 26) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவரை தீவிரச் சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிறுநீரகத் துறை மருத்துவர்களின் மேற்பார்வையில் அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.