பானி பூரிக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
பானி பூரிக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத் துறையினர் பானி பூரி மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு நடத்தினர்.
அதில், பானி பூரி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. பானி பூரி தயாரிப்பில் சாஸ் மற்றும் மீட்டா பவுடர் பயன்படுத்தப்படுகிறது. இந்த தீங்கு விளைவிக்கும் கூறுகள் மனித உடலில் நுழைந்தால், ஆரோக்கியம் மோசமடையும்.
எனவே, புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களுக்கு விரைவில் தடை விதிக்க உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத் துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தரத்துறை ஆணையர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், பானி பூரியில் பயன்படுத்தப்படும் காரா மற்றும் மிட்டாவில் ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதிக காரம் சாப்பிடுவதால் அமிலத்தன்மை மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. பானிபூரியை 5-7 வருடங்கள் சாப்பிட்டு வந்தால் அல்சர், புற்று நோய் வரும். இது தொடர்பாக அமைச்சர் மற்றும் துறை முதன்மை செயலாளரிடம் பேசி முடிவெடுக்கப்படும். 4-5 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை.
அது வந்த பின், கூட்டம் நடத்தி, பானி பூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களுக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, கோபி மஞ்சூரி மற்றும் கபாப்பில் புற்றுநோயை உண்டாக்கும் தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.