காணாமல் போன 25 வயதுடைய இஸ்ரேலிய இளம் பெண் கண்டு பிடிக்கப்பட்டார்.

உப்புவெளி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இஸ்ரேலிய பெண் கடந்த 26ஆம் திகதி தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியேறி , 27ஆம் திகதி முதல் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்திருந்த நிலையில் குறித்த பெண் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார் என கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் பி.மதனவாசன் , அவரது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
பிந்திய செய்தி
தாமர் அமிதாய் (Tamar Amitai) என்ற இஸ்ரேலிய யுவதி கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் இலங்கை இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்த காணாமல் போன சம்பவம் இலங்கை மற்றும் சர்வதேச ஊடகங்களில் பெரும் கவனத்தைப் பெற்றிருந்த நிலையில், குறித்த யுவதி கடந்த 22 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்து திருகோணமலை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து கடந்த 26 ஆம் திகதி அங்கிருந்து வெளியேறியுள்ளார். அதன் பின் அவர் ஹோட்டலுக்கு திரும்பவில்லை.
தேடுதல் நடவடிக்கையின் போது நிலாவெளி பகுதியில் மலைச்சரிவில் தவறி விழுந்து சிறு காயங்களுக்குள்ளான நிலையில் யுவுதியை கண்டுபிடிக்க முடிந்துள்ளதுடன் , அவர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.