நாமல் அணியை வளைத்துப் போட ரணில் வியூகம்! – விரைவில் விசேட பேச்சு.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு மறுத்து வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தலைமையிலான அணியை தம் பக்கம் வளைத்துப் போடுவதற்கு ஜனாதிபதி தரப்பு வியூகம் வகுத்துள்ளது என்று ஜனாதிபதி வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த அணியுடன் விரைவில் விசேட பேச்சு ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார் என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணிலின் கொள்கையுடன் ஒத்துப்போக முடியாது என்று நாமல் அணி மறுப்பதால் அவர்களுடன் பொது இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
இந்த அணியுடன் பேச்சு நடத்துவதற்கான ஏற்பாட்டை ஜனாதிபதியுடன் சேர்ந்து இயங்கும் மொட்டுக் கட்சி அமைச்சர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சுப் பதவிகள் வகித்து வரும் மொட்டு எம்.பிக்கள் அனைவரும் ஜனாதிபதி ரணிலுக்கே ஆதரவு வழங்கி வருகின்றனர். ரணிலையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டின் வேட்பாளராக அல்லது பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
அமைச்சுப் பதவிகள் இன்றி மொட்டுக் கட்சியுடனேயே இருக்கும் மொட்டு எம்.பிக்கள் நாமல் ராஜபக்க்ஷவுக்கே ஆதரவு
வழங்கி வருகின்றனர். குறிப்பாக இளம் எம்.பிக்கள் நாமல் பக்கமே உள்ளனர்.
ஆனால், மொட்டுக் கட்சியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் ரணிலுக்கே ஆதரவு வழங்கி வருகின்றனர்.