மாணவர் விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கியது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா, அனைத்துலக மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஒருமடங்குக்குமேல் உயர்த்தியிருப்பதாக ஜூலை 1ஆம் தேதி தெரிவித்துள்ளது.
வெளிநாட்டினர் அதிக எண்ணிக்கையில் குடியேறியதால் ஆஸ்திரேலிய சொத்துச் சந்தை எதிர்கொள்ளும் நெருக்குதலைச் சமாளிக்க அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ள அண்மைய நடவடிக்கை இது.
ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி, அனைத்துலக மாணவர்களுக்கான விசா கட்டணம் 1,600 ஆஸ்திரேலிய டாலராக (S$1,446) உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் அது 710 ஆஸ்திரேலிய டாலராக இருந்தது (S$641).
மேலும், வருகையாளர் விசா வைத்திருப்போரும் தற்காலிக பட்டதாரி விசா வைத்திருப்போரும் ஆஸ்திரேலியா சென்றபின் மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
“இன்று நடப்புக்கு வரும் மாற்றங்கள் ஆஸ்திரேலியாவின் அனைத்துலகக் கல்வித் திட்டத்தின் நேர்மையான நடைமுறையை மீட்டெடுக்கவும் நியாயமான, சிறிய, மேம்பட்ட குடியேற்ற நடைமுறையை உருவாக்கவும் உதவும்,” என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளேர் ஓ’நீல் கூறியுள்ளார்.
தற்போது மாணவர் விசா கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைவிட ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாவுக்கு அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதைத் தடுக்கும் வண்ணம் விசா விதிமுறைகளைக் கடுமையாக்கியிருப்பதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியது.
2022 முதல் 2023ஆம் ஆண்டு வரை இரண்டாவது அல்லது அதற்கடுத்தமுறை மாணவர் விசா பெற்றவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காட்டுக்குமேல் அதிகரித்து 150,000க்குமேல் பதிவானதை அடுத்து இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.