மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்வோரைக் குறிவைக்கும் செயற்கை நுண்ணறிவு மோசடி அதிகரிப்பு
மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்வோரையும் அந்நாட்டு ஹோட்டல் துறையினரையும் குறிவைக்கும் மோசடிக் குற்றங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்கொள்ள மேலும் கடுமையான விதிமுறைகளும் வலுவான பாதுகாப்பும் அவசியம் என்று மலேசிய ஹோட்டல் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
மலேசிய ஹோட்டல் துறையினருக்கும் இணையம் வழி இயங்கும் சுற்றுப்பயண முகவைகளுக்கும் இடையே மிக நெருக்கமான ஒத்துழைப்பு இருப்பதால் மலேசியாவில் இதுபோன்ற மோசடிகள் அரிது என்று அந்நாட்டின் மலிவுக் கட்டணம் மற்றும் வர்த்தக ஹோட்டல் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ கணேஷ் மைக்கல் தெரிவித்தார்.
இருப்பினும், இத்தகைய மோசடிக் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அவை கவலைக்குரியவை என்றும் அவர் கூறினார்.
இணையம் வழி இயங்கும் சுற்றுப்பயண முகவைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்துத் தேவையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த மலேசிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் கணேஷ் வலியுறுத்தினார்.
அத்தகைய முகவைகளில் ஏர்பிஎன்பி’ நடத்துநர்களும் அடங்குவர் என்று அவர் தெரிவித்தார்.
‘ஏர்பிஎன்பி’ நடத்துநர்கள் பலர் வெளிநாடுகளிலிருந்து செயல்படுபவர்கள் என்றார் அவர்.
“உள்நாட்டு மற்றும் அனைத்துலகப் பயணங்களுக்கான முன்பதிவுகளுக்கு தனிப்பட்ட விவரங்களைச் சேகரிக்கத் தெளிவான செய்முறை இருக்க வேண்டும். அப்போதுதான் ஆண்ட்ராய்ட் தொகுப்புப் பதிவிறக்கங்கள், வெளிப்புற இணைப்புகள் மூலம் போலி முன்பதிவுகள், போலி தங்குமிடங்கள், தனிப்பட்ட விவரங்களைத் திருடுவது ஆகியவற்றைத் தடுக்கலாம்.
“உதாரணத்துக்கு, முன்பதிவு செய்பவரின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும். போலி அடையாளத்தைப் பயன்படுத்தி முன்பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது. தரவுகள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் வாடிக்கையாளர் பாதுகாப்பை உறுதி செய்யவும் விதிமுறைகள் மிகவும் முக்கியம். பாதுகாப்பை மேம்படுத்த இணைப்புகள் தொடர்பான கொள்கைகளை கடுமையாக்குவது, ஈரடுக்கு அடையாள முறை போன்ற நடவடிக்கைகளை Booking.com நடைமுறைப்படுத்தியுள்ளது.
“இணையத்தளங்களையும் பயனீட்டாளர் போக்கையும் கட்டுப்படுத்த சட்டங்களும் விதிமுறைகளும் அவசியம்,” என்று டாக்டர் கணேஷ் கூறினார்.
விருந்தோம்பல் துறையைக் குறிவைக்கும் தகவல் திருட்டு குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருப்பதை இணையம் வழி சுற்றுப்பயண முகவையான Booking.com நிறுவனத்தின் தலைமைத் தகவல் பாதுகாப்பு அதிகாரியுமான டாக்டர் கணேஷ் சுட்டினார்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திப் பார்ப்பதற்கு உண்மையான மின்னஞ்சல்களைப் போல இருக்கும் போலியான மின்னஞ்சல்களை மோசடிக்காரர்கள் உருவாக்கி அனுப்புவதாக அவர் கூறினார்.
அவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் கடன் அட்டை விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் போன்றவற்றை மோசடிக்காரர்கள் ஏமாற்றிப் பறிப்பதாக டாக்டர் கணேஷ் தெரிவித்தார்.
Booking.com இதுகுறித்து கவலை தெரிவிக்கிறது என்றால் நிலைமை அபாயமான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்,” என்று ஜூன் 29ஆம் தேதி பேட்டியளித்தபோது டாக்டர் கணேஷ் எச்சரிக்கை விடுத்தார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் ஆற்றல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அதைப் பயன்படுத்தி இணையம் மூலம் பயண முன்பதிவுகளைச் செய்யும் வாடிக்கையாளர்களை மோசடிக்காரர்கள் ஏமாற்றக்கூடும் என்றும் அவர் கூறினார்.
ஒருசிலரைத் தவிர, மலேசியாவில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்துறையினர் Booking.com, டிராவல்லோகா போன்ற பயணத் தளங்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதாக டாக்டர் கணேஷ் தெரிவித்தார். இதன்மூலம் மோசடிகளைத் தவிர்க்க முடிவதாக அவர் கூறினார்.