ஆந்திராவில் முதியோர், விதவைகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை : வழங்கிய சந்திரபாபு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியின்படி முதியோர் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தியுள்ளார். மேலும் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், கள் இறக்கும் தொழிலாளர்கள், மீனவர்கள், நலிந்த நெசவுத் தொழிலாளர்கள், திருநங்கைகள், எச்ஐவி நோயாளிகளுக்கு மாதம் ரூ.4000 உதவி பணம் வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

மாற்று திறனாளிகளுக்கு கடந்த அரசு வழங்கி வந்த மாத உதவித் தொகை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. தீவிர நோயாளிகள், அதாவது சக்கர நாற்காலியில் இருப்போருக்கு உதவித் தொகை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. புற்றுநோய், சிறுநீரக கோளாறு இருப்போருக்கான தொகை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே இத்தொகை உயர்த்தப்பட்டு, பணம் வீடு தேடி வரும் என சந்திரபாபு அறிவித்திருந்தார்.

அதன்படி, நேற்று ஆந்திர மாநிலம் முழுவதும் 65,18,496 பயனாளிகளுக்கு அந்தந்த கிராம, பஞ்சாயத்து, மாவட்ட அளவிலான அரசு அதிகாரிகள், எம்.பி., எம்எல்ஏக்கள் மாத உதவித் தொகையை வழங்கினர். இதற்காக ஆந்திர அரசுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.4,408 கோடி செலவாகும். கடந்த அரசை விட இந்த அரசுக்கு கூடுதலாக ஒவ்வொரு மாதமும் ரூ.819 கோடி செலவாகும். இத்திட்டத்தை மங்களகிரி தொகுதி பெனுமாகா எஸ்.டி. காலனியில் சந்திர பாபு நாயுடு தொடங்கி வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.