இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்கள் – ஜனாதிபதியின் விசேட அறிக்கை இதோ (வீடியோ)
கடன் மறுசீரமைப்பு மற்றும் அது தொடர்பான விடயங்கள் தொடர்பில் அதிகாரத்தை பெற பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு நபர்கள் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், நாட்டிற்கான சரியான கொள்கையுடன் அரசாங்கம் முன்னோக்கிச் செல்லும் போது இந்த விமர்சகர்கள் நாளுக்கு நாள் பல்வேறு கதைகளை உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் வெற்றி பெற்ற நடுத்தர வருமான நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாகவும், இது நாட்டுக்கு கிடைத்த தனிச்சிறப்பு மற்றும் நல்ல செய்தி என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (02) பாராளுமன்றத்தில் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நற்செய்தியை எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்லும் வகையில், அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தில் வெற்றியீட்டி நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலான செயற்பாட்டில் ஒன்றிணையுமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு விடுத்தார்.
கடந்த இரண்டு வருடங்களாக தாம் அரசியலில் ஈடுபடவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, தாம் எப்பொழுதும் நாட்டின் நலனுக்காகவே தீர்மானங்களை எடுப்பதாகவும், அரசியல் அதிகாரத்திற்காகவோ அல்லது பிரபலத்திற்காகவோ அல்ல எனவும் வலியுறுத்தினார்.
https://youtu.be/yiDNfkeLx0U