சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையை கட்டுப்பாடுகளுடன் தென் ஆப்பிரிக்க ஆரம்பித்தது.
கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையாத நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையை கட்டுப்பாடுகளுடன் தென் ஆப்பிரிக்க அரசு அனுமதித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 6 மாதங்களாக பல்வேறு நாடுகளும் சர்வதேச விமானப்போக்குவரத்துச் சேவையை நிறுத்தியிருந்தன. இந்நிலையில், தென் ஆப்பிரிக்கவின் ஜோகன்னஸ்பர்க் ஓ.ஆர்.தாம்போ சர்வதேச விமானநிலையத்தில் முதன்முதலாக நேற்று ஜெர்மனியின் லூப்தான்ஸா விமானங்கள் வந்து சேர்ந்தன. அதைத் தொடர்ந்து ஜாம்பியா, கென்யா, தான்சானியா ஆகிய நாடுகளில் இருந்தும் விமானங்கள் வரத் துவங்கின. கேப்டவுன், டர்பன் நகரிலும் நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை நேற்று மீண்டும் துவங்கியது.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளதாவது:
சர்வதேச பயணிகள் தென் ஆப்பிரிக்காவுக்கு வரும் முன், கண்டிப்பாக 72 மணிநேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழுடன்தான் பயணிக்க வேண்டும். பயணிகள் அனைவரும் கொரோனா வைரஸ் பரிசோதனைச் சான்றிதழ், காப்பீடு, தனிமைப்படுத்துதலுக்கான கட்டணம் ஆகியவை கூடுதலாக செலுத்த வேண்டும். கொரோனா பாதிப்பு இருந்தால், அதற்குரிய சிகிச்சை கட்டணமும் செலுத்த வேண்டும்.
கொரோனாவால் அதிகப்படியான பாதிப்புகளைச் சந்தித்துள்ள ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா உட்பட 50 நாடுகளில் இருந்து எந்த சுற்றுலாப்பயணியும் தென் ஆப்பிரிக்காவுக்கு வருவதற்கு அனுமதி இல்லை. இந்த பட்டியல் அடுத்த ஒவ்வொரு 2 வாரங்களுக்குப்பின் சூழலை ஆய்வு செய்து மீண்டும் திருத்தி அமைக்கப்படும். இவ்வாறு தென் ஆப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இதுவரை கொரோனாவால் 6.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 16,866 பேர் உயிரிழந்துள்ளனர். 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.