சம்பந்தனின் அறியாத பக்கங்கள் ….

இலங்கையின் அரசியல் அரங்கில் தனித்துவமான ஆளுமையாக இருந்த மூத்த அரசியல்வாதியும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் 2024 ஜூன் 30 இரவு காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிப்ரவரி 5, 1933 இல் பிறந்த ராஜவரோதியம் சம்பந்தன் தனது 91வது வயதில் மறைந்தார்.

ஆர்.சம்பந்தன் என அவர் அரசியல்வாதியாக அறியப்பட்டவர்.

ஆரம்ப காலம்

கல் ஓயா திட்டத்தில் பணியாற்றிய களஞ்சியசாலை காப்பாளரான ஏ. ராஜவரோதியத்தின் மகன் ஆர். சம்பந்தன், யாழ்ப்பாணம் புனித பெட்ரிக்ஸ், குருநாகல் செனட். ஆன்ஸ், திருகோணமலை புனித ஜோசப் மற்றும் மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரிகளில் கல்வி பயின்றார்.

பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து சட்டத்தரணியானார்.

வழக்கறிஞராகப் பதவியேற்ற பிறகு, ஆர். சம்பந்தன் திருகோணமலையில் பணியாற்றினார்.

பாராளுமன்ற பிரவேசம்

தொழில் ரீதியாக வழக்கறிஞராக இருந்து , பின்னர் தொழில்முறை அரசியல்வாதியாக மாறிய ஆர். சம்பந்தனின் அரசியல் வாழ்க்கை இலங்கையில் தமிழ்த் தேசிய இயக்கத்தில் முன்னிலை வகித்த அரசியல் தலைவர் எஸ்.ஜே.வி.யுடன் இலங்கைத் தமிழரசு கட்சியில் (ITAK) உறுப்பினராக இணைந்ததிலிருந்து ஆரம்பமானது.

1956 இல், ஆர். சம்பந்தன் இலங்கை தமிழ் அரசு கட்சியில் உறுப்பினரானார்.

1970ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆர். சம்பந்தன் திருகோணமலை தொகுதியில் இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் போட்டியிட்ட போதிலும் அவர் வெற்றிபெறவில்லை.

1977 பொதுத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி (TULF),பிரதிநிதித்துவப்படுத்தி கல்குடா தொகுதியைத் தவிர வடக்கு-கிழக்கில் பெரும்பான்மையான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வென்று , பாராளுமன்றத்தில் இரண்டாவது சக்திவாய்ந்த தனி அரசியல் கட்சியாக மாறிய நேரத்தில் சம்பந்தன் பாராளுமன்றத்துக்குள் முதல் முறையாக காலடி வைத்தார்.

அந்தப் பொதுத்தேர்தலில் பாராளுமன்றம் நுழைந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் 16 உறுப்பினர்களில் சம்பந்தனும் ஒருவர்.

1977இல் இருந்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1989ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும், ஆர். சம்பந்தனுக்கு தனது தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை.

1994 நாடாளுமன்றத் தேர்தலில் அவரால் வெற்றிபெற முடியாது போனாலும் , திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரான ஏ. தங்கதுரையின் படுகொலைக்குப் பின் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பி நாடாளுமன்றம் நுழையும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மீண்டும் நாடாளுமன்றத் தொகுதியை இழந்தார். ஆர். சம்பந்தனின் அடுத்த நாடாளுமன்ற வாழ்க்கை 2004 தேர்தல் வெற்றியுடன் ஆரம்பமாகிறது. அதன் பின்னர் 2005, 2010 மற்றும் 2015 பொதுத் தேர்தல்களில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
இலங்கையின் இரண்டாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவர்

அவர் செப்டம்பர் 2015 முதல் டிசம்பர் 2018 வரை இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்குப் பிறகு இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக ஆன இரண்டாவது தமிழ் அரசியல்வாதி சம்பந்தனாகும்.

1977ஆம் ஆண்டு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்று , 38 வருடங்களின் பின்னர் இலங்கையின் இரண்டாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் நாடாளுமன்ற வரலாற்றில் இடம்பெற்றார்.

2015 பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி (UNF) அதிக ஆசனங்களைப் பெற்ற போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (UNFA) இலங்கை பாராளுமன்றத்தில் இரண்டாவது அதிக ஆசனங்களைக் கொண்ட அரசியல் கட்சியான போதிலும் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அதில் அங்கம் வகித்த, அப்போதைய நிர்வாகத்துடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, பாராளுமன்ற குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில், ‘ஒன்றிணைந்த எதிர்க்கட்சி’யாக தோன்றிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (UNFA) உறுப்பினர் குழு, R. சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைமைக்கு சவால் விடுத்ததுடன், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முயற்சித்தது, ஆனால் சபாநாயகர். சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்று சம்பந்தது பதவி உறுதி செய்யப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு

ஆர். சம்பந்தன் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) இலங்கையில் தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு தனித்துவமான திருப்புமுனை என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மிதவாத அரசியல் தலைவர்களின் கட்சியான ITAK, உள்ளடக்கிய TULF இன் இணைப்புடன் , ஆயுதப் போராட்டப் பாதையிலிருந்து விலகி அரசியலில் ஈடுபட்டிருந்த EPRLF, PLOTE, TELO ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த தேர்தல்களில் போட்டியிட்டது.

1977ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.சம்பந்தன், 2004ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழ் அரசு கட்சித் தலைவராக இருந்து வந்தார்.

சம்பந்தன் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான பின்னர், 2014ஆம் ஆண்டு முதல் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா பதவியேற்றார்.

ஆர்.சம்பந்தன் இறக்கும் வரை கட்சியின் மூத்த ஆலோசகராக அவர் பணியாற்றினார்.

பாராட்டுக்களும் , குற்றச்சாட்டுகளும்

போராட்டப் பாதையில் இருந்து விலகி தமிழ் மக்களுக்கான அமைதி, நல்லிணக்கம் மற்றும் நீதிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மிதவாத அரசியல்வாதியாக அறியப்பட்டார்.

எனினும் அவரது சில செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் சம்பந்தன் எதிர்கொண்ட முதலாவது அரசியல் சவால் புலிகள் தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கையாகும்.

2001 இல் இலங்கை அரசாங்கம் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலிகளுடன் உறவுகளை ஆரம்பித்ததுடன் 2002 ஏப்ரலில் சம்பந்தன், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பதினைந்து பேர் வேலுப்பிள்ள பிரபாகரனையும் , அன்டன் பாலசிங்கத்தையும் கிளிநொச்சியில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

எவ்வாறாயினும், இலங்கையில் உள்ள தமிழர்களின் முன்னணி அமைப்பாக விடுதலைப் புலிகளை அங்கீகரித்ததன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டது. ஆனந்தசங்கரி, கூட்டணியில் இருந்து வெளியேறிய போது, ​​பல சிங்கள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கடும் எதிர்ப்பை சம்பந்தன் சந்திக்க வேண்டியிருந்தது.

சிங்களம் பெரும்பான்மையாக உள்ள பல பாடசாலைகளில் (மொரட்டுவை மற்றும் குருநாகல்) கல்வி கற்ற சம்பந்தன் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழை வெற்றிகரமாக கையாளக்கூடிய சில தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவராவார்.

சம்பந்தனின் மறைவுக்கு பின் உருவாகும் தமிழ் அரசியல் வெற்றிடம்
சம்பந்தனின் மறைவு மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த ஆலோசகர் மாவை சேனாதிராஜாவிடம் பிபிசி சிங்களம் வினவியது.

சம்பந்தனும் நானும் ஒரே நேரத்தில் அரசியலுக்கு வந்தோம். சம்பந்தன் இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தது தமிழ் மக்களின் அதிர்ஷ்டம்.’

சம்பந்தன் எப்போதும் நீதிக்காக நின்றவர். சம்பந்தன் தொடர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக வாதிட்டார்.’

‘சம்பந்தனும் , நானும் , எமது அணியும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க ஒவ்வொரு முறையும் முயற்சி செய்தோம்.

‘பல்வேறு இடையூறுகளைச் சந்திக்க நேர்ந்தாலும் சம்பந்தனின் தலைமையில் அந்தத் தடைகளைக் கடக்க அனைவரும் உழைத்தோம்’ என்றார்.

சம்பந்தனின் அரசியல் வெற்றிடத்தை வேறு எவராலும் நிரப்ப முடியாது.
சம்பந்தன் தமிழ் மக்களின் உண்மையான ஒரு அரசியல் தலைவர்.’

 

மூலம் : BBC சிங்களம்
தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.