பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பு.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த சிலர் மறைமுக ஆதரவு தெரிவித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து பயங்கரவாத தடுப்புப்பிரிவு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த நான்கு பேர் விசாரணைக்கு நேரில் முன்னிலையாக அமலாக்கத்துறை சார்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நான்கு பேரும் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக ரகசிய கூட்டங்கள் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோர் அண்மையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பற்றி தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு நாள்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக டாக்டர் ஹமீது உசேன் கூட்டாளிகளின் வீடுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இரண்டு பேர் கைதாகி உள்ளனர்.
இந்நிலையில், சோதனை நடத்தப்பட்ட நான்கு பேரின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் அடிப்படையில், இவர்கள் நான்கு பேருக்கும் விசாரணைக்கு நேரில் முன்னிலையாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.