ஹத்ராஸ் நெரிசல் சம்பவ பலி எண்ணிக்கை 121.
ஆக்ரா: இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் ஜூலை 2ஆம் தேதியன்று நடைபெற்ற இந்து சமய நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி மாண்டோர் எண்ணிக்கை 121ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு காரணமான போலே பாபா தலைமறைவாகி உள்ளார். அவரைப் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்தை புதன்கிழமை (ஜூலை 3) நேரில் பார்வையிட்ட அவர், விசாரணைக் குழுவில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி, காவல்துறை அதிகாரிகளும் இடம்பெறுவார்கள் என்று கூறினார்.
ஹாத்ரஸ் மாவட்டத்தின் முகல்கடி கிராமத்தில் போலே பாபா என்று அழைக்கப்படும் நாராயண சகர் ஹரி அல்லது சகர் விஷ்வ கரி நடத்திய சமய நிகழ்வில் ஏறக்குறைய 250,000 பேர் கூடியிருந்ததாகவும் அது அனுமதிக்கப்பட்டதைவிட மும்மடங்கு அதிகம் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பார்வையிட்ட காவல்துறை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிகழ்வு முடிந்ததும் அதற்குத் தலைமைத் தாங்கிய போலே பாபாவின் காலைத் தொட்டு ஆசி பெற பலர் விரைந்ததில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி கூறினார்.
சிறிய அளவிலான கூட்டத்திற்கே மாவட்ட அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்படவில்லை. உத்தரப்பிரதேச காவல்துறை தரப்பில் 48 காவல் அதிகாரிகளே பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.
போலே பாபா சீடர்களில் கிட்டத்தட்ட 12,500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டத்தின் பெரிய பந்தலில் காற்று வசதியும் குறைவாக இருந்துள்ளது.
பகல் 3.00 மணி அளவில் கூட்டம் முடிந்தவுடன் முதல் ஆளாக போலே பாபா கிளம்பியுள்ளார். பாபாவிடம் ஆசி பெறவும், அவரது காலடி மண்ணை சேகரிக்கவும் மக்கள் முண்டியடித்தபோது நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவர் மீது மற்றொருவர் விழுந்தனர்.
பிறகு கூச்சல், குழப்பத்துடன் கூட்டத்தினர் வெளியேறியபோதும் வாசல்களில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், பக்தர்களில் பலரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழத் துவங்கி உள்ளனர். சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
தனக்காக கூடிய பக்தர்களை பற்றி கவலைப்படாமல் போலே பாபா சொகுசு வாகனத்தில் அங்கிருந்து கிளம்பியுள்ளார். சம்பவத்தைக் கேள்விப்பட்டு அவர் திரும்பி வரவும் இல்லை. மருத்துவமனைகளுக்கும் செல்லவில்லை. மாறாக, தலைமறைவானவர் தன் கைப்பசியையும் அணைத்து வைத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சி தொடர்பாக வழக்கு பதிவு செய்த உத்தரப் பிரதேச காவல்துறையினர், நிர்வாகத்தினரை தேடி வருகின்றனர். போலே பாபாவையும் பிடிக்க முடியவில்லை.
மெயின்புரி மாவட்டத்தில் சாமியாருக்கு சொந்தமான ராம் குதிர் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் காவல்துறையினர் சோதனைகள் மேற்கொண்டனர்.
இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை குறைந்தது 121ஆக உயர்ந்திருப்பதாக உத்தரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் சிங்கும் அம்மாநிலக் காவல்துறையின் தலைமை இயக்குநர் பிரஷாந்த் குமாரும் உறுதி செய்தனர். இவர்களில் 126 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் பெண்கள், சிறுவர்கள்.
சம்பவ இடத்துக்கு அவர்கள் இருவரும் ஜூலை 2ஆம் தேதி மாலை நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நடந்த பகுதியில் மக்களின் உடமைகள் சிதறிக் கிடக்கின்றன. ஆடைகள், திருமண அட்டைகள், ஆதார் அட்டைகள், டிபன் பாக்ஸ்கள், பைகள், காலணிகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.
இந்தச் சம்பவம் விபத்தா அல்லது சதித்திட்டமா என்பதை கண்டறிய உத்தரப் பிரதேச அரசாங்கம் தீவிர விசாரணை மேற்கொள்ளும் என்றும் துயரச் சம்பவத்துக்குக் காரணமானோருக்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார். விபத்து குறித்து சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கவுரவ் திவேதி பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து போலே பாபாவின் நிகழ்ச்சிகளுக்கு ஆக்ரா மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த நிகழ்ச்சி ஆக்ராவில் வியாழக்கிழமை நடைபெற இருந்தது.