ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் சென்ற “மொரட்டுவ பிரஜை” சொல்லும் கதை!
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் திகதி தொடர்பில் உச்ச நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரையில் தற்போது திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை தடுக்க இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மொரட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் தொழில்முனைவோரான சி.டி. லெனாவ இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.
அதன் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழு, அதன் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 19வது திருத்தம் காரணமாக, ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான திருத்தம் காரணமாக, ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் திகதி தொடர்பில் தெளிவின்மை ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் கோரியுள்ளார்.
“1978 அரசியலமைப்பின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் பதவிக் காலம் 06 வருடங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் 03வது அத்தியாயத்தின் ஊடாக அரசியலமைப்பின் 30(2)வது சரத்து திருத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 அல்லது 06 வருடங்களில் முடிவடைவதா என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் கீழ் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களாக குறைக்கப்பட வேண்டும். ஆனால் அது சர்வஜன வாக்கெடுப்பில் நிறைவேற்றப்படவில்லை.
அரசியலமைப்புச் சட்டத்தின் 82-வது பிரிவின்படி, பொது வாக்கெடுப்பை முறையாக நடத்தாததன் மூலம் 30(2) சட்டப்பிரிவு முறையாக நிறைவேற்றப்படவில்லை என்பது தெளிவாகிறது.
எனவே, ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்களில் முடிவடைகிறதா அல்லது 06 வருடங்களில் முடிவடைகிறதா என்ற பிரச்சினை எழுந்துள்ளது.
“பிரச்சினை தீரும் வரை ஜனாதிபதி தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தகவல் அளித்த மனுதாரர், “2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ச அந்த பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தால் பதில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்படி தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய திகதிகள் தொடர்பில் அரசியலமைப்பு ரீதியாக சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும் பட்சத்தில், அது தொடர்பாக விளக்கம் அளிக்கும் அதிகாரம், உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் திகதி தொடர்பில் நீதிமன்றினால் தெளிவான விளக்கமளிக்கும் வரை, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு, மனுதாரர் உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
அத்துடன், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பின் 30(2) உறுப்புரை சரியான முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறும் உச்ச நீதிமன்றத்தை மனுதாரர் மேலும் கோரியுள்ளார்.