ஹாத்ரஸ் சம்பவம்: போலே பாபாவின் ஆசிரமத்தில் காவல்துறை சோதனை
உத்தரப்பிரதேச மாநிலம் மணிப்பூரியில் அமைந்துள்ள போலே பாபாவின் ஆசிரமத்தில் காவல்துறையினர் இன்று சோதனை செய்துள்ளனர்.
போலே பாபாவை தேடி வரும் காவல்துறை, அவரது ஆசிரமத்தில் மறைந்திருக்கிறாரா அல்லது அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து துப்பு கிடைக்குமா என்ற கோணத்தில் சோதனையை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையில், ஆன்மிகச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்த அமைப்பின் பெயர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படவில்லை.
சோதனைக்குப் பிறகு, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுனில் குமார் கூறுகையில், ஆசிரமம் முழுக்க சோதனை செய்யப்பட்டுவிட்டது. அதில் போலே பாபா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு சுமார் 40 – 50 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். நேற்றும் ஆசிரமத்துக்கு பாபா வரவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும், ஆசிரமத்தை சுற்றி காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆன்மிகச் சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை உத்தரவிட்டிருக்கிறார்.
ஹாத்ரஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில், ‘போலே பாபா’ என்பவரின் சொற்பொழிவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனா்.
மாலையில் நிகழ்ச்சி முடிந்து மைதானத்தைவிட்டு போலே பாபா கிளம்பும்போது, ஆசி பெற அவரின் வாகனத்தைப் பின்தொடா்ந்த மக்களால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் மூச்சுத்திணறி பலா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு, லாரிகள் மற்றும் பிற கனரக வாகனங்களில் சிக்கந்தர ராவ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா்.
இச்சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 121-ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பெண்கள் ஆவா். ஆறு போ் வேற்று மாநிலத்தைச் சாா்ந்தவா்கள். இன்னும் 4 பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்படவில்லை. சிக்கந்தர ராவ் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.