பெருந்தலைவரின் புகழுடலுக்கு யாழில் பலரும் அஞ்சலி!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடல் இன்று யாழ்ப்பாணத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் புகழுடல் இன்று காலை கொழும்பில் இருந்து விசேட விமானம் மூலம் பலாலி விமான நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டது. அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் முற்பகல் 10.15 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன்போது சம்பந்தனின் புகழுடலுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு கௌரவம் செலுத்தப்பட்டதோடு தலைமைக் காரியாலத்தில் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
அதன் பின்னர் இரா.சம்பந்தனின் புகழுடல் யாழ். நகர் பகுதியூடாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ், இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சிப் பிரமுகர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் உட்படப் பலர் அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.
சம்பந்தனின் புகழுடல் நாளை காலை யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளது என்று நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.