ஜனாதிபதி தேர்தலில் பொது தமிழ் வேட்பாளரை முன்வைப்போம் : விக்னேஸ்வரன் பல்ட்டி.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தப் போவதாக , வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தார்.
ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நேற்றுவரை கூறி வந்த சி.வி. விக்னேஸ்வரன் , திடீரென நேற்று ஊடகவியலாளர் மாநாட்டை கூட்டி பொது தமிழ் வேட்பாளரை நியமிக்க தயாராகி வருவதாக அறிவித்துள்ளார்.
“பொதுத் தமிழ் வேட்பாளரை நாங்கள் நியமிக்கிறோம். அவருக்கு வாக்களிப்போம். வேறு யாருக்கும் அல்ல. ” என்றார் விக்னேஸ்வரன்.
அதற்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேரும் என்றும், சுமார் ஏழு கட்சிகள் ஒன்று கூடி கடந்த வாரம் வவுனியாவில் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
“அதன்படி நாங்கள் குழுக்களை நியமித்தோம். அந்தக் குழுக்களில் எங்களுடைய வேட்பாளர் யார் என்பதைக் குறிப்பிட்டு அந்த வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்வோம். ”
“ஆனால், நாங்கள் வெற்றி பெற மாட்டோம். இந்த சந்தர்ப்பத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இதுவரை எமக்கு நடந்த அனைத்து விடயங்களையும் மக்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தி எமது தீர்மானம் என்ன என்பதை உலகத்திடம் கேட்க உள்ளோம் என்றார் விக்னேஸ்வரன் .
இதனால் ஒரு வேட்பாளருக்கு 50 சதவீத வாக்குகள் விழுவது தடுக்கப்படுமா என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, அது நடக்கலாம் என்று விக்னேஸ்வரன் கூறினார்.
“இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்பு வாக்கை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று சொன்னேன். அதை நமது ஏனைய தலைவர்கள் விரும்ப மாட்டார்கள். எப்படியும் எங்கள் வேட்பாளருக்கே முதல் வாக்கை வலியுறுத்தி போடச் சொல்வொம். ” என்றார் அவர்.