பங்காளிகளைத் தக்கவைக்க ‘மொட்டு’ கடும் பிரயத்தனம்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபர் பஸில் ராஜபக்ஷவுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைவரம் குறித்து சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேல் கலந்துரையாடல் இடம்பெற்றது.
மொட்டுக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள மஹஜன எக்சத் பெரமுன கட்சியின் தலைவர் என்ற அடிப்படையிலேயே அந்தச் சந்திப்பில் பிரதமர் பங்கேற்றார். மஹஜன எக்சத் பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடியும் சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
மொட்டுக் கட்சியின் சார்பில் பஸில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான காமினி லொக்குகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சாகர காரியவசம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த சுமார் ஏழு பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையிலேயே, தமது கட்சியின் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காத பிரதமரின் கட்சியுடன் பஸில் ராஜபக்ஷ பேச்சு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.