மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியால மாணவர் கெளரவிப்பும் சிறுவர் தின நிகழ்வும்
சுவீடன் நாட்டினால் உலகெங்கிலுமுள்ள பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட Stochholmunior Water Prize 2020 எனும் சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சிப் போட்டியில் பங்கேற்று இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்களான ரீ.தினோஜன், கே.அபினயா மற்றும் இம்மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய இப்பாடசாலை இரசாயனவியல் ஆசான் எஸ்.தேவகுமார் ஆகியோரை கல்லூரி முதல்வர் எம்.சபேஸ்குமார் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இப்போட்டியில் சர்வதேச ரீதியில் 257 நாடுகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். இவற்றில் 24 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆசியா கண்டத்திலிருந்து இறுதிப் போட்டிக்கு இப்பாடசாலை மாணவர்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளமை இலங்கை மக்கள் அனைவருக்குமே பெருமை சேர்க்கும் ஒரு விடயமாகும்.
கடந்த 30 வருடமாக சுவீடன் நாட்டினால் இப்போட்டி நடத்தப்பட்ட போதிலும் இறுதிப் போட்டிக்கு இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு பாடசாலை மாணவர்களும் இதுவரை தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.