ஜப்பானுக்கு 2040ல் ஒரு மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் தேவை.

ஜப்பான், 2040ஆம் ஆண்டுவாக்கில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் என்று ஆய்வுக் கழகம் ஒன்று மதிப்பிட்டுள்ளது.

மக்கள்தொகை குறைந்து வரும் வேளையில் பொருளியல் வளர்ச்சி இலக்குகளை அரசாங்கம் எட்ட வேண்டுமானால் ஊழியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

தற்போதைய சூழ்நிலை தொடர்ந்தால் 2040ஆம் ஆண்டுவாக்கில் ஜப்பானில் 5.9 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் இருக்க வேண்டும். ஆனால் ஒரு மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் குறைவாக இருப்பார்கள். அதாவது வெளிநாட்டு ஊழியர் தேவை ஆண்டுக்கு 1.24 விழுக்காடு வளர்ச்சி காண வேண்டும் என்று ஜப்பானிய அனைத்துலக ஒத்துழைப்பு முகவையின் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேவைப்படும் வெளிநாட்டு ஊழியர்க்கும் கிடைக்கும் வெளிநாட்டு ஊழியர்க்கும் உள்ள இடைவெளி முன்பு 2022ல் மதிப்பிட்டதைவிட தற்போது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

வியட்னாம், மியன்மார், கம்போடிய ஆகிய நாடுகளில் பொருளியல் தரவுகளை ஆராய்ந்த பிறகு ஆய்வாளர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

ஜப்பானிய பொருளியலுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் மிக முக்கியம். பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதாலும் மூப்படையும் மக்கள்தொகை அதிகரிப்பாலும் தொழிலாளர் பற்றாக்குறையை வெளிநாட்டு ஊழியர்கள் நிவர்த்தி செய்து வருகின்றனர்.

ஜப்பானில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் நான்கு மடங்காக உயர்ந்து 2.1 மில்லியனாக உள்ளது. இது, கடந்த ஆண்டு அக்டோபர் நிலவரப்படி ஒட்டுமொத்த ஊழியர் அணியில் மூன்று விழுக்காடாகும்.

Leave A Reply

Your email address will not be published.