இந்தோனீசியாவின் ஜேஐ பயங்கரவாதக் குழு கலைக்கப்பட்டதாக அறிவிப்பு.

இந்தோனீசியாவில் உள்ள ஜமா இஸ்லாமியா (ஜேஐ) பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர்கள் தங்கள் குழு கலைக்கப்பட்டு விட்டதாக அறிவித்துள்ளனர். ஆனால், இந்த வட்டாரத்தின் உயிர்க்கொல்லி தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய அக்குழு தொடர்பான பயங்கரவாத மிரட்டல்கள் இன்னும் தொடர்ந்திருக்கும் என்று பகுப்பாய்வார்கள் எச்சரித்துள்ளனர்.

ஜகார்த்தாவுக்கு அருகில் போகோர் நகரில் உள்ள தேசிய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பிடம் காணொளி வழியாக நடத்தப்பட்ட சந்திப்பில், அந்தக் குழுவின் மூத்த தலைவர் அபு ருஸ்டான், ஜமா இஸ்லாமியாவின் மூத்த வழக்கறிஞரும் குழுவின் தோழமை இஸ்லாமிய உறைவிடப் பள்ளிகளும் ஜேஐ கலைக்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

ஒரு போராளி சமயகுருவும் முன்னாள் ஜேஐ தலைவருமான அபு ருஸ்டான், 2021 செப்டம்பரில் பெக்காசியில் கைது செய்யப்பட்டார். குழு கலைக்கப்பட்ட செய்தி அறிவிக்கப்பட்டபோது, அபு ருஸ்டானுடன் பரா விஜயாந்தோவும் இருந்தார். அவர் போராளிகளை குழுவில் சேர்ப்பதிலும் சிரியாவுக்காக நிதி திரட்டுவதிலும் முக்கிய பங்காற்றினார். தென்கிழக்காசியாவில் மிகவும் ஆபத்தான பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட விஜயாந்தோ, 2019ல் கைது செய்யப்பட்டார்.

“இந்தோனேசியா ஒரு மேம்பட்ட மற்றும் கண்ணியமான நாடாக மாறும் நோக்கத்தில் நாட்டின் சுதந்தரத்தின் மேம்பாட்டுக்காக துடிப்புடன் பங்காற்ற நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதன் தொடர்பான சட்ட விதிமுறைகளைப் பின்பற்றவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்றார் அபு ருஸ்டான்.

வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள், அமைப்புகளின் தீவிர கண்காணிப்பு போன்றவை ஜேஐ அமைப்பை வலுவிழக்க செய்துள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அக்குழு எவ்வித தாக்குதலுக்கும் பொறுப்பேற்கவில்லை.

ஜேஐ குழு கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பான பாதுகாப்பு மிரட்டல்களை நாம் நிராகரிக்க முடியாது என்று பயங்கரவாத பகுப்பாய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

“ஜேஐ குழுவுக்குள் உள்ள சிறு சிறு பிரிவுகள் ஜிகாத் புனிதப் போருக்குத் தங்கள் கடப்பாட்டைத் தெரிவிக்க வன்முறையைக் கையில் எடுக்கலாம்,” என்று தெரிவித்தார் சிங்கப்பூர் எஸ், ராஜரத்தினம் அனைத்துலக ஆய்வுக் கழகத்தின் வருகை ஆய்வாளரான டாக்டர் நூர் ஹுடா இஸ்மாயில்.

ஜகார்த்தைவைத் தளமாகக் கொண்டுள்ள தீவிரவாதம் மற்றும் தீவிரவாத மனப்போக்கற்ற ஆய்வுகளுக்கான மையத்தின் மூத்த ஆய்வாளரான திரு முஹ் தவ்ஃபிக்ரஹ்மான், “ஒரு முறை ஜேஐ என்றால் அவர் எப்போதுமே ஜேஐதான். அக்குழுவின் மூத்த உறுப்பினர்கள் வலுவிழந்து காணப்பட்டாலும் அக்குழுவின் இளைய உறுப்பினர்கள் தீவிரவாத போக்கைத் தொடர்வதில் முனைப்புடன் இருக்கக்கூடும்,” என்றும் கருத்துரைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.