அல்டெய்ர் (Altair) அடுக்குமாடி சோகம்: மாணவியின் தந்தை , மாணவனை கடிந்து கொண்டதால் இருவரும் பாய்ந்து உயிரிழந்தனரா?
கொம்பனிதெரு அல்டேர் அடுக்குமாடி கட்டிடத்தின் 67வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவி மற்றும் மாணவனது பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்தியர் இன்று (4) பகிரங்க தீர்ப்பு வழங்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
இமாம் எனும் பாகிஸ்தான் நபருக்கு சொந்தமான தொடர் அடுக்கு வீட்டுக்கு, பாகிஸ்தான் நபரின் மகன் கற்கும் பள்ளி நண்பர்களான அதே வகுப்பில் கற்கும் மாணவர்கள் வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்கள்.
அந்த மாணவர்கள் அந்த வீட்டில் உள்ள நண்பரை இதற்கு முன்பும் பலமுறை சென்று பார்த்துள்ளமையால், வெளியாட்கள் நுழைய கடினமாக உள்ள இந்தக் கட்டிடத்திற்குள் முன் அனுமதி பெற்றதன் விளைவாக அவர்கள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், அன்று அவர்கள் வந்தபோது குறிப்பிட்ட நண்பர் அங்கு இல்லாது போனாலும், அவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி கிடைத்துள்ளது.
முதலில் 5வது மாடியில் உள்ள ஜிம்மிற்குச் சென்று பாடசாலை உடைகளுக்கு பதிலாக புதிய ஆடைகளை அணிந்து கொண்டு, மாணவி தனியாக இருக்க, ’டெலிவரி பார்சலொன்றை’ பெறுவதற்காக மாணவன் கீழே செல்வது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
வந்தவர் சிகரெட் கொடுத்ததாக போலீசார் கூறுகின்றனர்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
“போதை பொருள் எதையும் பெற்றதாக தகவல் எதுவும் இல்லை… இதுவரை மருத்துவ அறிக்கைகள் எமக்கு கிடைக்கவில்லை. ஆனால் இதுவரை நாம் மேற்கொண்ட அவதானிப்புகளின்படி அந்த மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவோ அல்லது அவ்வாறான தகவல்களோ வெளியிடப்படவில்லை. ஆனால் மருத்துவ அறிக்கைகளின்படி , ஏதாவது உட்கொண்டதா என்று கண்டுபிடிக்க முடியும்.
இதேவேளை, அன்றைய தினம் குறித்த மாணவர்கள் விரக்தியடைந்ததாகவும், அன்றைய தினம் குறித்த மாணவி பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் பரவிய செய்திக்கு பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ,
“இந்த வகையான பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமோ அல்லது அத்தகைய சூழ்நிலை பற்றிய எந்தச் செய்தியோ இல்லை. இரண்டு மாணவர்களும் கட்டிடத்தில் மிகவும் நிதானமாக நடப்பதைக் கவனிக்க முடிகிறது. அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருந்ததாக எங்கள் விசாரணையில் தெரியவில்லை. ”
அவர்கள் காதலர்களா என்ற கேள்விக்கு ஊடகப் பேச்சாளர் கூறியதாவது:
“அப்படியான ஒரு சூழ்நிலையை உறுதியாக கூற முடியாது. ஆனால் அவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர் என்பதை அவதானிக்க முடிகிறது, ஆனால் அவர்களுக்குள் காதல் இருந்தது என்பதாக தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.”
“இது ஒரு விபத்தா இல்லையா என்பதை இன்னும் உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் இது உடனடி விபத்தாக இருக்கலாம். விசாரணையில் இது தற்கொலையா என நாங்கள் உறுதிப்படுத்தவில்லை.
கடந்த காலங்களில் சமூக ஊடகங்களில் இந்த மாணவர்களில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்பட்டு இருந்தது தொடர்பாக எந்த தகவலையும் , இதுவரை நாம் விசாரணைகளில் அவதானிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
மாணவியும் மாணவனும் கீழே குதித்த 67வது மாடியின் பால்கனியில் இருந்து ஒரு ஜோடி காலணிகள், பணப்பைகள், கைத்தொலைபேசிகள் மற்றும் ‘டன்ஹில்’ சிகரெட் பாக்கெட்டை ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவர்கள் தங்கள் உடைமைகளை பால்கனியில் வைத்துவிட்டு குதித்தார்கள் அல்லது விழுந்தார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
எதிர்காலத்தில் வெளியாகவுள்ள மருத்துவ பதிவுகளின் படி, போதைப்பொருள் உட்கொண்டமை தெரியவந்தால், இந்த விபத்து விபரீதமான நடத்தையால் ஏற்பட்டதாக ஊகிக்க முடியும்.
குறித்த மாணவி உயரமான இடங்களுக்குச் சென்று புகைப்படம் எடுப்பதில் நாட்டம் கொண்டிருந்ததாகவும், அவ்வாறான பல புகைப்படங்களை அவரது கையடக்கத் தொலைபேசியில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி செல்பி எடுக்க முற்பட்ட போது உயரமுள்ள மதிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்பது பொலிஸாரின் சந்தேகங்களில் ஒன்றாகும்.
மேலும், இறப்பதற்கு முன் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சந்தேகம் இருப்பதாக தகவல் இல்லை.
அல்டேர் குடியிருப்பில் நண்பர்கள் இருப்பதை மாணவி மற்றும் மாணவன் ஆகிய இருவரின் பெற்றோரும் அறிந்துள்ளனர். ஆனால் மாணவி மட்டும் அன்றைய தினம் அல்டேர் அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்வதாக பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை என அறிய முடிகிறது.
மகள் வீட்டிற்கு வர தாமதமானதால், மாணவியின் தந்தை, மாணவியின் நண்பர் என்பதை அறிந்த மாணவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் விழுவதற்கு சற்று முன் இந்த தோலைபேசி அழைப்பு வந்துள்ளது.
எனினும் அந்த அழைப்பு வந்த போது மாணவி தன்னுடன் இல்லை என மாணவன் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை மாணவியின் தந்தை நம்பவில்லை. வழக்கறிஞரான மாணவியின் தந்தை, மாணவனிடம் கடுமையாகப் பேசியதால், பயந்து போன நிலையில், மாணவன் சொல்வது பொய் என தெரிந்ததால், போலீசுக்கு அறிவிப்பதாக மாணவியின் தந்தை கூறியுள்ளார். இதனால் மாணவன் பயந்து போனதாக கூறப்படுகிறது.
அதன்பின், அழைப்பு துண்டிக்கப்பட்டதால், இந்த வாக்குவாதத்திற்கு உடனடி பதிலடியாக இருவரும் மேலிருந்து குதித்திருக்கலாம் என போலீசாருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
இவர்களின் தொலைபேசி பதிவுகளை வைத்தும் விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகள் தொடர்கின்றன ……
ஜீவன்