விஜயகாந்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பயன்படுத்தக் கூடாது – தேமுதிக

முன் அனுமதியின்றி விஜயகாந்தை செயற்கை நுண்ணறிவு மூலம் படங்களில் பயன்படுத்தக்கூடாது என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் மறைந்த விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் நடிக்க வைத்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து, பலர் தங்களது படங்களில் இத்தகைய முயற்சியை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் முன் அனுமதியின்றி விஜயகாந்தை செயற்கை நுண்ணறிவு மூலம் படங்களில் பயன்படுத்தக்கூடாது என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சித் தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், ’’தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது.

எனவே, இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.’’ இவ்வாறு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.