நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது என்பது இயலாத ஒன்று – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்!
இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்த நிலையில், அது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதில், “மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது என்பது இயலாத ஒன்று. அப்படி அந்த நீட் தேர்வை ரத்து செய்வது என்பது நியாயமானதாகவும் இருக்காது.
நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்த தேவையில்லை. ரகசியத் தன்மையை மீறும் வகையில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையில்லை” என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருவதாகவும், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது. பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெறாததால் இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும், தேர்வை ரத்து செய்தால், நேர்மையாக தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.