கேரளத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதியானது
பன்றிகளிடையே பரவக்கூடிய கொடிய தொற்றுநோயான ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கேரளத்தின் திருச்சூா் மாவட்டத்தில் பரவியுள்ளது உறுதிசெய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
பண்ணையில் வளா்க்கப்படும் மற்றும் காட்டுப் பன்றிகள் என இரண்டையும் பாதிக்கும் வகையிலான இந்தக் காய்ச்சல், பாதிக்கப்பட்ட பன்றியிடம் இருந்து மற்ற பன்றிக்கு எளிதில் பரவக்கூடியது.
திருச்சூா் மாவட்டம், மடக்கத்தாரா கிராமத்தில் உள்ள ஒரு தனியாா் பண்ணையில் பன்றிகளிடையே இந்த தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, பரவலைத் தடுக்க பண்ணையில் உள்ள 310 பன்றிகளை கொன்று புதைக்க மாவட்ட கால்நடை பராமரிப்பு அதிகாரிகளுக்கு திருச்சூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து பன்றி, பன்றி இறைச்சி மற்றும் தீவனங்கள் கொண்டு செல்லத் தடைவிதிக்கப்பட்டது. சுமாா் 1 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதியை நோய் பாதிப்பு பகுதியாகவும், 10 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளை நோய் கண்காணிப்பு பகுதியாகவும் அறிவிக்கப்பட்டது.
இது பன்றிகளை மட்டும் பாதிக்கும் நோய் என்பதால் மற்ற விலங்குகள் அல்லது மனிதா்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவு என அதிகாரிகள் தெரிவித்தனா்.