இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த ஜிம்பாப்வே.
இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்று பெற்றுள்ளது. இதன் மூலம் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் வெற்றியை ஜிம்பாப்வே பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஜிம்பாப்வே தொடரில் அடுத்த தலைமுறை வீரர்கள் விளையாடினர். அதன்படி இந்த தொடரின் முதல் ஆட்டம் ஹராரே நகரில் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரவி பிஸ்னோய் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், அவேஷ்கான், முகேஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
116 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஓப்பனர் அபிஷேக் ஷர்மா டக்அவுட்டானார். இதனால் முதல் ஓவரில் 0-1 என்ற நிலையில் மோசமாக தொடங்கியது ஆட்டம். அடுத்து ஷூப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் இணைந்தனர். ஆனால் ருதுராஜூம் நம்பிக்கை கொடுக்கவில்லை. 4ஆவது ஓவரில் 7 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து 5ஆவது ஓவரில் ரியான் பராக் 2 ரன்களிலும், ரிங்கு சிங் ரன் எதுவும் எடுக்காமலும் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது இந்திய அணி.
10-வது ஓவரில் துருவ் ஜூரேல் 6 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டாக 5 விக்கெட் இழப்புக்கு 43 ரன்களைச் சேர்த்து தடுமாறியது இந்திய அணி. மறுபுறம் நிலைத்து ஆடி நம்பிக்கை அளித்த ஷூப்மன் கில் 11-வது ஓவரில் போல்டானார். அணியில் அவர் மட்டும் தான் அதிகபட்சமாக 37 ரன்களைச் சேர்த்தார். ரவி பிஸ்னோய் 9 ரன்களுக்கு எல்பிடபள்யூ முறையில் அவுட்டானார். 15 ஓவர்கள் முடிவில் 75 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்திருந்தது இந்திய அணி.
ஓரளவுக்கு நம்பிக்கையளித்த அவேஷ் கான் 16 ரன்களிலும், முகேஷ் குமார் ரன் எதுவும் எடுக்காமல் போல்டாக 18 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. களத்தில் வாஷிங்டன் சுந்தர், கலீல் அகமது இருந்தனர்.
வாஷிங்டன் சுந்தர் தேவையான நேரத்தில் சிக்ஸ், அடுத்து பவுண்டரி விளாசியது பெரும் ஆறுதல். கடைசி ஓவரில் 6 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், 5வது பந்தில் வாஷிங்டன் சுந்தர் 27 ரன்களுக்கு அவுட்டாக 102 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது இந்தியா. இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஜிம்பாப்வே அணி தரப்பில் சிக்கந்தர் ராஜா , டென்டாய் சாட்டரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ப்ளஸ்ஸிங் முசாரபானி, லுக், பிரயன் பெனட், வில்லிங்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.