லண்டன் நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் மறைவு : ஈழநாடு
முன்னாள் லண்டன் நியூஹாம் பகுதியின் கவுன்சிலர் , போல் சத்தியநேசன் அவர்கள் , 2024 ஜூலை 5ம் திகதி லண்டனில் காலமானார்.
அவர் சில காலமாக இதய நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். லண்டனில் மட்டுமல்ல இலங்கை சென்றிருந்த சமயத்திலும் நோய் வாய்ப்பட்டு , அங்கும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.
1960 ஜூன் 17ம் திகதி யாழ்பாணத்தில் பிறந்த போல் சத்தியநேசன் யாழ். பரியோவான் கல்லூரியில் கல்விபயின்றார்.
இலங்கை அரசியல் நிலவரம் காரணமாக 1985 இல் பிரித்தானியாவுக்கு புகலிடக் கோரிக்கையாளராக புலம் பெயர்ந்த , போல் சத்தியநேசன் , லண்டனில் இயங்கி வந்த தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்துடன் ( TRRO )இணைந்து , புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் , தாயக மக்களுக்கும் உதவிகளை செய்யத் தொடங்கினார்.
தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்துடன் ( TRRO )இணைந்து பணியாற்றியதன் காரணமாக ,போல் சத்தியநேசன் , தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (PLOTE) ஒரு ஆதரவாளராக மாறி , தோழர். போள் சத்தியநேசன் என அழைக்கப்பட்டார். பின்னர் அதன் ஒரு அங்கமாகவும் செயல்பட்டார்.
ஒரு முறை புலம் பெயர்ந்த தமிழர் குறித்து குறிப்பிடும் போது , ” ஊரில் எமக்கு உறவுகள் , சொந்தங்கள் எல்லாம் இருந்தது , ஆனால் அரசியல் நிலையில் இரண்டாம் தரத்தில் இருந்தோம். இங்கிலாந்துக்கு நாங்கள் வரும்போது இங்கு உறவுகள் என யாரும் இல்லை. பெருமை எல்லாம் போய்விட்டது.” என்றார்.
இங்கிலாந்து வந்த போல் சத்தியநேசன் , கல்வி கற்றுக் கொண்டே , மொழி தெரியாத தமிழருக்கு உதவ ஆரம்பித்ததோடு ஆங்கிலேயரோடும் உறவை வளர்த்துக் கொண்டார்.
அவர் செய்த சமூக சேவைகளால் கிடைத்த நன்மதிப்பால் , பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் அங்கத்தவராகி , நியூஹாம் கவுன்சிலின் கவுன்சிலரும், துணை குடிமைத் தூதருமாக பல காலம் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டதுடன் , சேவையாற்றி பலரது நன் மதிப்பை பெற்றார்.
14 வருடங்களுக்கு பின் பிரிட்டன் தொழிலாளர் கட்சி, மாபெரும் வெற்றியை ஈட்டிய அதே தினத்தில் போல் சத்தியநேசன் , தன் வாழ்கை பயணத்திலிருந்து விடைபெற்றார். அந்த மாபெரும் வெற்றியை கொண்டாட அவரால் முடியாமல் போனது வருத்தமே!
போல் சத்தியநேசன் ஒருமுறை , போரினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கு நிதியளிப்பதில் புலம் பெயர் சமூகம் முக்கியமான செயல்பாட்டைச் செய்கிறது. அவர்களின் பணம் தமிழ் சிவில் சமூகத்தை செயல்பட வைத்துள்ளது என புலம் பெயர் உதவிகளை மெச்சினார்.
“இலங்கையில் உறவினர்கள் உள்ளமையால் , மக்கள் நிகழ்வுகள் , அனாதை இல்லங்கள், கோவில்கள், தேவாலயங்களை என ஆதரிப்பதோடு, தம்மால் வாரி வழங்கவும் தயங்கவில்லை” என அவர் தமிழர் குறித்து பெருமைப்பட்டார். அத்தோடு சமூகத்துக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய அவர் ஒருபோதும் தயங்கியதே இல்லை.
புலம் பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு பல்வேறு உதவிகளை அர்ப்பணிப்புடன் செய்த உன்னதமான ஒரு மனிதர். உயரத்தால் மட்டுமல்ல உள்ளத்தாலும் உயர்ந்த மனம் படைத்த ஒரு குழந்தை என, போல் சத்தியநேசனை குறிப்பிடலாம்.
நீண்டகாலமாக நியூஹாம் கவுன்சிலின் கவுன்சிலராகவும், துணை குடிமைத் தூதராகவும் , சமூகசேவையாளராகவும், ஜனநாயகத்திற்கும் நீதிக்குமான போராட்டங்களில் பங்கு கொண்ட ஒரு தீவிர செயற்பாட்டாளராகவும் இருந்த போல் சத்தியநேசனின் மறைவு ஈடு செய்ய முடியாதது.
போல் சத்தியநேசனின் சேவைகள் வரலாற்றில் மட்டும் அல்ல மக்கள் மனங்களிலும் என்றும் நினைவுகூரப்படும்.
ஜீவன்
வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்
தோழர் போல் சத்தியநேசன் அவர்களின் மறைவு
செய்தி தற்போது கிடைத்தது. அதிர்ச்சிதரும் தகவல்.
அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
சென்ற மாதம் – வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்
தில் தேசிய மக்கள் சக்தியின் ஹரிணி அமரசூரிய வந்த
போது – நானும் சிராப் தோழரும் அவரை புகையிரத
நிலையத்தில் சந்தித்து – அவருடன்தான் பாராளுமன்றத்
திற்குள் கடுமையான பாதுகாப்பு சோதனைகளை கடந்து
– கூட்டத்திற்கு சென்றோம். பல விடயங்கள் பேசினோம்.
இந்த செய்தி நம்ப முடியவில்லை. அதற்க்கு முன்னர்
புளொட் ராகவனின் அஞ்சலி கூட்டத்திலும் சந்தித்து
பேசினோம்.
நீண்டகாலமாக உள்ளுராட்சி சபை உறுப்பினராகவும் – சமூகசேவையாளராகவும் ஜனநாயகத்திற்கும் நீதிக்குமான போராட்டங்களில் ஒரு தீவிர செயற்பாட்டாளராகவும் இருந்த அவரது சேவைகள் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்.
– சாந்தன் கே. தம்பையா
ஓய்வொழிச்சல் இல்லாத சமூக சேவகர்
போல் சத்தியநாதன் தனது பூர்வீக யாழ் உரும்பிராய்
கிராமம் ஈழத் தமிழ் தேசிய சமூக விடுதலை பிரித்தானிய
தொழிலாளர் கட்சி என பரந்த ஒரு தளத்தில் இயங்கிய
வர் ஊரும் உலகமென அவரது உறவுகள்.
கிழக்கு லண்டன் ஈஸ்ட்கம் மாநகர சபையில் மக்க
ளின் தெரிவாக உறுப்பினராகவும் பின்னர் மேயராகவும்
கடமையாற்றியவர்.
ஓய்வொழிச்சல் இல்லாத சமூக சேவகர். பிரித்தானிய
தொழிலாளர் கட்சியின் உற்சாகம் மிக்க அங்கத்தவர்.
தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஆரம்பகால
செயற்பாட்டாளர். யாழ் பரியோவான் கல்லூரியின்
பழைய மாணவர்.
– தோழர் சுகு சிறிதரன்
நன்றி : ஈழநாடு
மரண அறிவித்தல் இணைப்பு
https://www.riphall.com/2407060222