ஆம்ஸ்ட்ராங் கொலை : முதல்கட்ட விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் பின்னணி இல்லை என்றும், ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கு முடியும் வரை தேவையான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சென்னையையே உலுக்கி உள்ள நிலையில், அது தொடர்பாக வேப்பேரியில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் உள்நோக்கம் கிடையாது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறினார். எந்த வாகனத்தில் கொலையாளிகள் வந்தார்கள் என்னென்ன ஆயுதங்களை கொண்டுவந்தார்கள் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி மற்றும் செல்போன் சிக்னல் மூலமாக 3 மணிநேரத்தில் 8 பேரும் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள்தான் கொலை செய்தது என்பது உறுதியாகி உள்ளதாகவும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறினார்.

ஆற்காடு சுரேஷ் கொலைக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்றும் மற்ற அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறிய காவல் ஆணையர், ஆம்ஸ்ட்ராங் அரசியல்வாதி ஆவதற்கு முன்னால் ஏதேனும் பகை இருந்ததா என்று விசாரிப்பதாக தெரிவித்தார்.

மேலும் கைதான பொன்னை பாலு மீது ஏற்கெனவே 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறிய அவர், சரித்திரப்பதிவேடு குற்றவாளியான திருமலை மீது 7 வழக்குகளும் சந்தோஷ் என்பவர் மீது வெளிமாநிலத்தில் ஒரு வழக்கும் உள்ளதாக விளக்கினார்.

காவல்துறையிடம் ஒப்படைத்த துப்பாக்கியை தேர்தல் முடிந்த உடனேயே ஆம்ஸ்ட்ராங் பெற்றுக் கொண்டதாகவும் அவர் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்றும் விவரித்தார்.

கடந்த ஓராண்டில் சென்னையில் மட்டும் 1192 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ரவுடிகள் மட்டும் 666 பேர் என்றும் காவல் ஆணையர் ரத்தோர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.