சம்பந்தனுக்கு கண்ணீரோடு விடை கொடுத்தது தமிழினம்
தமிழர் தேசத்தின் தலைநகரில் உணர்வுபூர்வமாக இறுதி நிகழ்வு
தமிழர் தேசத்தின் தலைமகனாக தமிழ் மக்களை வழிநடத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனுக்குத் தமிழினம் இன்று தமிழர் தேசத்தின் தலைநகர் திருகோணமலையில் நடந்த அவரின் இறுதி நிகழ்வில் கண்ணீரோடு விடை கொடுத்தது.
கடந்த ஞாயிறன்று காலமான சம்பந்தனின் இறுதி சமயக்கிரியைகள், இலக்கம் 115, அஞ்சல் நிலைய வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 1.00 மணியளவில் நிறைவு பெற்றன. பிற்பகல் 02 மணிக்கு விசேடமாக அமைக்கப்பட்ட மேடையில் அஞ்சலி உரைகள் ஆரம்பமாகின.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி லக்ஸ்மன் கிரியெல்ல, பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ப.அண்ணாமலை, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, ரவூப் ஹக்கீம் எம்.பி., மனோ கணேசன் எம்.பி., த.சித்தார்த்தன் எம்.பி., அருண் தம்பிமுத்து, ஜே.வி.பியின் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் உரையாற்றினர்.
இன்றைய இறுதி நிகழ்வுகளில் இலங்கைக்கான அயல் நாட்டுத் தூதுவர்கள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மாலை 3.30 மணிக்கு அஞ்சலி உரைகள் நிறைவு செய்யப்பட்டு, தொடர்ந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
அஞ்சல் நிலைய வீதி, மின்சார நிலைய வீதி ஊடாக கிறீன் வீதிச் சந்தியை அடைந்து, அங்கிருந்து கல்லூரி வீதிக்கு சென்று, மீண்டும் சோனகர் தெரு ஊடாக இராஜவரோதயம் வீதியை அடைந்து, பின்னர் பிரதான வீதிக்குச் சென்று, அங்கிருந்து கடற்காட்சி வீதி ஊடாக ஏகாம்பரம் வீதிக்கு சென்று இறுதியாக திருகோணமலை இந்து மயானத்தை அடையவிருந்தது.
அங்கு அன்னாரின் மூத்த மகன் ச.சஞ்ஜீவன் சிதைக்குத் தீ மூட்ட உள்ளார்.
அன்னாரின் இறுதி ஊர்வலம் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மற்றும் பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் என்பனவற்றில் பூதவுடலுக்கு விசேட அஞ்சலியை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதேவேளை, இறுதி ஊர்வலம் செல்லவுள்ள வீதிகளில் உள்ள மக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மறைந்த ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் உரிமைகளுக்காகவும் முன் நின்ற தலைவர் என்றும் சம்பந்தனும் தானும் எப்போதும் பிரிக்கப்படாத இலங்கைக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஆர். சம்பந்தனுடன் உடன்பாட்டுடன் முன்நோக்கி கொண்டு வந்த அந்தக் கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
திருகோணமலையில் அன்னாரது இல்லத்தில் இன்று (07) பிற்பகல் நடைபெற்ற சம்பந்தனின் இறுதி கிரியையில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த ஆர். இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியைகள், இன்று (07) பிற்பகல் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
ஆர். சம்பந்தனின் மரணம் தொடர்பில் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த ஜனாதிபதி, அவரது மறைவு நீண்டகால நண்பரின் இழப்பு எனவும் குறிப்பிட்டார்.
ஆர். சம்பந்தன் எப்பொழுதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தேசிய காணி ஆணைக்குழுவின் வரைவு தற்போது பாராளுமன்றத்தில் சமர்பிக்க தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வனவளத் திணைக்களத்துடன் இருக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக தீர்க்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தனின் பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஒரு மாற்றுப் பிரதமர் என்று குறிப்பிட்டதுடன், ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, உண்மையான எதிர்க்கட்சித் தலைவரின் பண்புகளை வெளிப்படுத்தியதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தல்கள் குறித்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, யார் நீதிமன்றத்திற்கு சென்றாலும், இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றும், அதன் பின்னரே பாராளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்