நீட் மோசடி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!
நீட் மோசடி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்த மே 5ம் தேதி நடைபெற்ற இளநிலை நீட் நுழைவு தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட 38 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு, குறிப்பிட சிலருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து உத்தரவிட்டது. இதன் பின்னர், மத்திய அரசின் உத்தரவையடுத்து, இளநிலை நீட் தேர்வு மோசடி தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.
இதனிடையே, நீட் முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தது.
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் வழக்கமான அலுவல்கள் தொடங்கப்பட உள்ளன. இதில், நீட் மோசடிகளுக்கு எதிரான வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய் அமர்வு வழக்குகளை விசாரிக்க உள்ளது. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீதும், மருத்துவக் கலந்தாய்வு குறித்தும் இன்றைய விசாரணையின் முடிவில் முக்கிய உத்தரவு வெளியாக வாய்ப்புள்ளது.