அத்துருகிரியவில் கிளப் வசந்த சுட்டுப் படுகொலை! பிரபல சிங்களப் பாடகி காயம்!! (Video)
பிந்திய செய்தி
இன்று (08) காலை 10 மணியளவில் அத்துருகிரிய பகுதியில் இருவர் டி.56 துப்பாக்கியுடன் வந்து இருவரை கொன்றுள்ளனர்.
கொலையாளிகள் இருவரும் வெள்ளை நிற காரில் வந்ததோடு , காரை கட்டிடத்தின் அடிப்பகுதியில் நிறுத்திவிட்டு, மேல் தளத்திற்கு சென்றே கொலை செய்துள்ளனர்.
அத்துரிகிரியவில் பிரபல பாடகி கே சுஜீவாவினால் அமைக்கப்பட்ட பச்சை குத்தும் நிலையத்தின் திறப்பு நாளில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட கிளப் வசந்த அல்லது சுரேன் வசந்த பெரேரா மற்றும் மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துருகிரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடகி கே.சுஜீவா மற்றும் மற்றுமொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கே.சுஜீவாவின் கால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்ஷான் பெல்லான ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தற்போது, கொலையாளிகள் சுட வந்ததாக சந்தேகிக்கப்படும் கார் கடுவெல, கொரதொட்ட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிளப் வசந்தாவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடைய கறுப்புப் பண மோசடி கும்பலின் வெடிப்பாக இது இருக்கலாம் என்றும் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துருகிரிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரபல சிங்களப் பாடகி கே.சுஜீவா உள்ளிட்ட 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இன்று முற்பகல் நடத்தப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துருகிரிய நகரில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் உள்ள அழகு நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின்போதே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரிகள் பயணித்தனர் எனக் கூறப்படும் வாகனம் அருகில் உள்ள சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.