ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல கொலை – வெளியான பரபரப்பு தகவல்
ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல கொலை என போலே பாபாவின் வழக்கறிஞர் பேசியுள்ளார்.
உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் என்ற கிராமத்தில் கடந்த 2ஆம் தேதி போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து வெளியேறும் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 131 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 2 பெண் உள்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டத்தை நடத்திய போலே பாபா தப்பி சென்ற நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
வீடியோ வாயிலாக பேசிய போலே பாபா, இந்த சம்பவத்துக்கு மிகவும் வருந்துகிறேன். தயவுசெய்து அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். குழப்பத்தை உருவாக்கிய யாரும் தப்பிக்க மாட்டார்கள் என நம்புகிறேன். எனது வழக்கறிஞர் ஏ.பி. சிங் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி. சிங், “சாமியார் போலே பாலாவின் பேச்சைக் கேட்க நிறைய பேர் வந்திருந்தனர். அதில் 15 – 16 நபர்கள் முகமூடி அணிந்தப்படி கூட்டத்திற்குள் வந்ததாகவும், அவர்கள் கையில் விஷக்கேனை கொண்டு வந்து, அதனைக் கூட்டத்தில் வைத்து திடீரென திறந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் என்னிடம் கூறினார்கள்.
உயிரிழந்தவர்களின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை பார்த்த போது அவர்கள் அனைவரும் காயப்பட்டு உயிரிழக்கவில்லை, மூச்சுத் திணறல் காரணமாகவே உயிரிழந்துள்ளனர். அவர்கள் தப்பித்து செல்ல வசதியாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரிக்க வேண்டும். இது மக்கள் மத்தியில் புகழ் அதிகரித்து வரும் பாபாவை இழிவுபடுத்த தீட்டப்பட்ட சதித்திட்டம் . இது விபத்து அல்ல; கொலை” என்று தெரிவித்துள்ளார்.