பிரான்சில் தொங்கு நாடாளுமன்றம் அமையக்கூடும்; தீவிர வலதுசாரி கட்சி ஏமாற்றம்

பிரான்சில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜூன் 30ஆம் தேதி முதல் சுற்று வாக்களிப்புக்குப் பிறகு தீவிர வலதுசாரி கட்சியான நேஷனல் ரேலி (ஆர்என்) அபார வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஜூலை 8ஆம் தேதி அதிகாலை இரண்டாம் மற்றும் கடைசி சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, இடதுசாரி கட்சியான நியூ பொப்யூலர் ஃபிரண்ட் (என்எஃப்பி) ஆக அதிக இடங்களைக் கைப்பற்றியிருப்பது தெரிய வந்துள்ளது. அக்கட்சி 182 தொகுதிகளை வென்றுள்ளது.

பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோனின் கட்சி 168 தொகுதிகளைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தீவிர வலதுசாரி கட்சியான ஆர்என் 143 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் பிரான்சில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிப்பதாகவும் அவை பிரெஞ்சு மக்களின் எண்ணங்களையும் விருப்பத்தையும் பிரதிபலிக்கவில்லை என்றும் தீவிர வலதுசாரி கட்சியான ஆர்என்னின் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, வலதுசாரி கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடதுசாரி கட்சி ஆக அதிக தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பது அரசியல் விமர்சகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

தேர்தல் முடிவுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் பதவிக்கு யாரை நியமிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமையை ஆக அதிக தொகுதிகளை வென்ற என்எஃப்பி கட்சிக்கு அதிபர் மெக்ரோன் தர வேண்டும் என்று பிரெஞ்சு கிரீன் கட்சியின் தலைவரான மரின் டொன்டிலியே கூறினார்.

பிரான்சின் தற்போதைய பிரதமர் கேப்ரியல் அட்டல், தமது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் புதிய அரசாங்கத்தை அமைக்கும் சவால் இருப்பதால் அவரது பதவி விலகலை அதிபர் மெக்ரோன் எற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இடைக்காலப் பிரதமராகத் தொடரத் தயாராக இருப்பதாக அட்டல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.