இணையத்தில் இளையர்கள் அதிக நேரம் செலவிடுதல்: தடுப்பதற்கு நேர வரையறை
இளையர்களை சமூக ஊடகங்களிலிருந்தும் இணைய விளையாட்டுகளில் இருந்தும் பாதுகாப்பதற்காக உலகெங்கிலும் உள்ள நாடுகள் புதுப்புது சட்டங்களை உருவாக்கி வருகின்றன.
இதுபோல் சிங்கப்பூரிலும் அரசாங்கம் இளையர்களை இணைய பாதிப்பிலிருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அறிவிக்க உள்ளது. இதன் தொடர்பில் மற்ற நாடுகள் இணையத்தளங்களை ஒழுங்குபடுத்த முயற்சிகள் எடுத்துவரும் நிலையில் சிங்கப்பூரும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளது.
இளையர்களை இணையத்துக்கு அடிமையாவதில் இருந்து மீட்க உலக நாடுகள் எடுத்துவரும் முயற்சிகள் சில இங்கு குறிப்பிடப்படுகிறது.
நேர வரையறை
நள்ளிரவுக்கு பின்னர் 16 வயதுக்கு கீழே உள்ள இளையர்கள் இணைய விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது என்று 2011ஆம் ஆண்டு முதன் முதலில் சட்டம் இயற்றிய நாடு தென்கொரியா.
ஆனால், இந்தச் சட்டம் 2021ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
அதற்கு பதிலாக, மிதமிஞ்சிய இணைய விளையாட்டுகளைக் கட்டுப்படுத்த ‘தேர்வு அனுமதி’ முறை, அதாவது பெற்றோர், பிள்ளைப் பராமரிப்பாளர்கள் ஆகியோரின் அனுமதியுடன் இளையர்களை இணைய விளையாட்டுகள் விளையாட அனுமதிப்பது என்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், அமெரிக்காவின் நியூயார்க் நகரமும் 18 வயதுக்கு கீழே உள்ள இளையர்களை அடிமையாக்கும் சமூக ஊடக விளையாட்டுகளில் இருந்து பாதுகாக்க சட்டம் ஒன்றை நிறைவேற்றியது.
சீனா இணையப் பயன்பாடு ஒழுங்குமுறை கண்காணிப்பாளர்கள், இணைய விளையாட்டுகள் தொடர்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் இளையர் முறையமைப்பு ஒன்றை ஏற்படுத்தும் விதமாக விதிமுறைகளை அறிமுகப்படுத்தினர்.
இதன்படி, இணையத்தளங்கள் இளையர்களுக்கு பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்க வேண்டும் என்பதுடன், இணைய பயன்பாடுகளில் நேர வரையறை, கட்டணக் கட்டுப்பாடு ஆகியவற்றுடன் வயதுக்கேற்ற பொருளடக்கம் மட்டுமே இருக்க வேண்டும்.
இந்தப் புதிய விதிமுறைகளின்கீழ் சீன அதிகாரிகள் 2023ஆம் ஆண்டு மிதமிஞ்சிய இணைய விளையாட்டுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் காணொளி விளையாட்டு நிறுவனங்களுக்கு தடை விதித்தது.
இந்தப் பிரச்சினையில் பெல்ஜிய நாட்டு அதிகாரிகள் ஒருபடி மேலே சென்று 2018ஆம் ஆண்டு கட்டணம் செலுத்தி நினைத்த மாத்திரத்தில் நேரலையாக வாங்கக்கூடிய விளையாட்டுகளுக்கு தடை விதித்தனர்.
இந்நிலையில், இளையர்களைப் பாதுகாப்பதில் சிங்கப்பூர் சட்ட நடவடிக்கைகள் பிரிட்டனை ஒத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்பில், ஜூலை 5ஆம் தேதி, தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, குறிப்பிட்ட இணையச் செயலிகளை இளையர்கள் தங்கள் வயதுக்கு ஏற்றவாறு இல்லாதவற்றை பதிவிறக்கம் செய்வதற்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த புதிய விதிமுறைகளை அறிவித்தார்.
இதில் சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் இனிவரும் மாதங்களில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.