பிரிட்டனைப் புதுப்பிக்க புதிய பிரதமர் ஸ்டார்மர் உறுதி
தேர்தல் வெற்றிக்குப் பிறகு புதிய பிரதமராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் கியர் ஸ்டார்மர் பிரிட்டனை மறுநிர்மாணம் செய்வதற்கான தனது திட்டத்தைத் தொடங்க உறுதிபூண்டுள்ளார்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) வெளியாயின. அத்தேர்தலில் தொழிற்கட்சி வெற்றிபெற்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் கியர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தாம் பிரதமர் என்று உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்பு வெளியானதும் சில மணி நேரங்கள் டவுனிங் ஸ்திரீட் பிரதமர் அலுவலகத்தில் தமது அமைச்சரவைக் குழுவை நியமிப்பதில் திரு ஸ்டார்மர் கவனம் செலுத்தினார்.
தமது முதல் அமைச்சரவைக் கூட்டத்தை ஜூலை 6ஆம் தேதி அவர் கூட்டுவார் என்று கூறப்பட்டது.
நாட்டின் முதல் பெண் நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸும் புதிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாம்மியும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
புதிய பிரிட்டிஷ் பிரதமராக தம்மை மன்னர் சார்லஸ் உறுதிசெய்த சிறிது நேரத்தில் பேசிய திரு ஸ்டார்மர், “மாற்றத்திற்கான பணிகள் உடனடியாகத் தொடங்குகின்றன,” என்றார்.
பிரதமரின் அதிகாரபூர்வ அலுவலகத்திற்கு அவர் வருகை தந்தபோது ஏராளமான தொழிற்கட்சியினர் வாழ்த்து முழக்கங்களை எழுப்பி அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
“சந்தேகத்திற்கு இடமின்றி பிரிட்டன் மறுநிர்மாணத்தில் நாம் ஈடுபடுவோம்,” என்று 61 வயதாகும் திரு ஸ்டார்மர் குறிப்பிட்டார்.
பிரதமராக அவர் ஆற்றிய முதல் உரையில் தமது அரசாங்கம் ஈடுபட இருக்கும் ஐந்து முக்கியப் பணிகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தால் நடத்தப்படும் தேசிய சுகாதாரச் சேவையை மீண்டும் செயல்படுத்துவது, பாதுகாப்பான எல்லைகள் மற்றும் சாலைகளை உறுதிப்படுத்துவது போன்றவை அந்தப் பணிகளில் அடங்கும்.
இருப்பினும், அவரது அரசாங்கத்திற்குப் பல சவால்கள் காத்திருக்கின்றன.
தேக்கமடைந்திருக்கும் பொருளியல், சீர்குலைந்திருக்கும் பொதுச் சேவைகள், வாழ்க்கைச் செலவின நெருக்கடியால் பாதிப்பில் இருக்கும் குடும்பங்கள் போன்றவை உள்ளிட்டவை அந்தச் சவால்கள்.