கள்ளப் பண விவகாரம்: நாடு கடத்தப்பட்ட ஒன்பதாவது குற்றவாளி
மூன்று பில்லியன் வெள்ளி கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்கிய விவகாரத்தில் குற்றம் புரிந்ததை ஒப்புக்கொண்ட வாங் டேஹாய், பிரிட்டனுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
35 வயது வாங், இந்த விவகாரத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 10 வெளிநாட்டவரில் கடைசி நபர் ஆவார். தனக்கு விதிக்கப்பட்ட 16 மாதச் சிறைத் தண்டனையில் சுமார் 11 மாதங்களை நிறைவேற்றிய பிறகு சனிக்கிழமையன்று (ஜூலை) அவர் நாடு கடத்தப்பட்டார்.
வாங், மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் திங்கட்கிழமையன்று (ஜூலை 8) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
சீனாவிலிருந்து வந்து சைப்ரஸ் நாட்டுக் குடியுரிமை பெற்ற வாங், கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்கியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அவருக்கு 16 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தனது சொத்துகளில் 49 மில்லியன் வெள்ளிக்கும் அதிக மதிப்புள்ளவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வாங் ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்கிய விவகாரத்தில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 10 பேரில் ஒன்பது பேர் நாடு கடத்தப்பட்டுவிட்டனர். சூ வென்சியாங், வாங் பாவ்சென் ஆகிய ஆடவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் மே மாதம் ஆறாம் தேதியன்று கம்போடியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
அதேபோல் பின்னர் சூ பாவ்லின், சூ ஹாய்ஜின், சென் சிங்யுவான், சாங் ருயிஜின், லின் பாவ்யிங் ஆகியோரும் கம்போடியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். வாங் ஷூய்மிங் ஜூன் மாதம் ஜப்பானுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்த விவகாரத்தில் சூ ஜியென்ஃபெங் மட்டும்தான் இன்னும் நாடு கடத்தப்படாமல் சிங்கப்பூரில் இருக்கும் குற்றவாளி. குற்றவாளிகள் அனைவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையில் ஒரு பகுதியையாவது நிறைவேற்றிவிட்டனர்.
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை சோதனை நடத்தியதைத் தொடர்ந்து இந்த 10 பேரும் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர். விசாரணையின்போது சிங்கப்பூரைவிட்டுத் தப்பியோடிய மேலும் 17 பேர் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர்.